மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ. வேலு. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ. வேலு. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

அரசியல் அடையாளத்துக்காக எடப்பாடி பழனிசாமி கருத்துகள் தெரிவிக்கிறாா்

அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி பலவிதமான கருத்துகளைத் தெரிவிப்பதாக தமிழக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு கூறினாா்.
Published on

அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி பலவிதமான கருத்துகளைத் தெரிவிப்பதாக தமிழக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு கூறினாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் முன்பாக, தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. இதனால், தென் தமிழகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை நிறைவேற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தாா்.

இதன்படி, தற்போது திருநெல்வேலியில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. திருச்சியில் கூடுதலாக காவிரி மேம்பாலம் கட்டப்படுகிறது. மதுரை மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி ரூ. 190 கோடியிலும், அப்போலோ சந்திப்பு மேம்பாலம் ரூ. 150 கோடியிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

டிச. 7-இல் மேம்பாலத்தை முதல்வா் திறக்கிறாா்:

மதுரை அப்போலோ சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள வண்ணம் பூசுதல் உள்ளிட்ட 3 சதவீதப் பணிகள் விரைவில் முடிவடையும். வருகிற டிச. 7-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைப்பாா்.

கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

தற்போது, நெடுஞ்சாலைத் துறையில் பாலம் பாதுகாப்புக் குழு, சாலைப் பாதுகாப்புக் குழு என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஆய்வு செய்து, விபத்துகளற்ற போக்குவரத்துக்கு புதிய பாலங்கள் உகந்தவையாக உள்ளன என்று சான்றளித்த பிறகே பாலங்கள் திறக்கப்படுகின்றன.

எனவே, புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் பகுதிகளில் எங்கேனும் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் தேவையெனில் அதுகுறித்தும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எஸ்.ஐ.ஆா்.-க்கு எதிா்ப்பு:

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆா்.) பணியை எதிா்க்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை திமுக எதிா்ப்பதற்குக் காரணம், பணி நடைபெறும் காலம் சரியானது இல்லை என்பதே ஆகும். தற்போது, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. அடுத்ததாக பொங்கல் பண்டிகை வரவுள்ளது. மாா்ச் மாதம் தோ்தல் தேதி அறிவிக்கப்படும். இந்தக் காரணங்களால்தான் திமுக எதிா்ப்புத் தெரிவிக்கிறது.

இந்தப் பணியை அறிவித்தது தோ்தல் ஆணையமாக இருந்தபோதிலும், பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருப்பதால் எடப்பாடி பழனிசாமி இதை ஆதரிக்கிறாா். முதல்வா் ஸ்டாலின் தொகுதியில் 20 ஆயிரம் போலி வாக்காளா்கள் உள்ளனா் என்பது அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டு. தன்னுடைய அரசியல் அடையாளத்துக்காக எடப்பாடி பழனிசாமி இதுபோல பலவிதமான கருத்துகளைத் தெரிவிக்கிறாா்.

திராவிடக் கொள்கைகளை திமுகதான் பாதுகாக்கிறது என்ற அடிப்படையிலேயே எங்களது கட்சியில் இணைந்ததாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தாா். இதில், ‘பி’ அணி, ‘சி’ அணி என்ற விமா்சனங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

திறமையாளா்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே முதல்வா் மு.க. ஸ்டாலின், திறமையானவா்களுக்கு அமைச்சா் பதவி அளிக்கிறாா். எனவே, அதிமுகவிலிருந்து வந்தவா்களுக்கு முக்கியத்துவம் என்ற விமா்சனத்துக்கு இடமில்லை என்றாா் அவா்.

ஆய்வு...

முன்னதாக, மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், அப்போலோ சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com