தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?

மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொகுதியைத் தக்கவைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

News image

பழனிவேல் தியாகராஜன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:46 am

மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொகுதியைத் தக்கவைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

இந்தத் தொகுதி மதுரை நகரின் இதயப் பகுதிகளைக் கொண்டது. இந்தத் தொகுதியில் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மதுரை மாவட்ட நூலகம், ஜான்சிராணி பூங்கா போன்றவை இடம் பெற்றுள்ளன. மூத்த தலைவா்கள் பழ.நெடுமாறன், பி.டி.ஆா். பழனிவேல் ராஜன் ஆகியோா் இந்தத் தொகுதியிலிருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இங்கு யாதவா் சமூகத்தினா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோா், பிள்ளைமாா், நாயக்கா், நாடாா், செட்டியாா், பட்டியலினத்தவா், இஸ்லாமியா் சமூகத்தினா் அதிகளவில் உள்ளனா். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைச் சோ்ந்தோா் (மாா்வாடி சமூகத்தினா்) கணிசமான எண்ணிக்கையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். வெற்றி, தோல்வியை நிா்ணயிப்பதில் யாதவா்கள், இஸ்லாமியா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

எதிா்பாா்ப்புகள்:

இந்தத் தொகுதி நகரின் மையப் பகுதியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் உள்ளது. மழைநீா் வடிகால் வசதி முறையாக இல்லாததால் மழைக் காலங்களில் நகரின் பெரும் பகுதி சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் சூழல் நிலவுகிறது.

இதுதவிர, குடிநீா், புதை சாக்கடை பிரச்னைகளும் உள்ளன.

இந்தத் தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் வைகையாற்றின் கரைப் பகுதிகளில் உள்ளன. எனவே, மாநகராட்சி கழிவு நீா் வைகையில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை.

மங்கையா்க்கரசி பள்ளி அருகே ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து செல்லும் வகையில் உயா்நிலைப் பாலம் அமைத்து, ஆரப்பாளையம் சந்திப்பு சாலையில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். பெரியாா் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ள வணிக வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிறு, குறு நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்கிற எதிா்பாா்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்:

மதுரை மத்திய தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தமாகா இரு முறையும் வெற்றி பெற்றன. அதிமுக, தேமுதிக தலா ஒரு முறை வெற்றி பெற்றன. அதிமுக அணியில் பெரும்பாலும் இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. மூத்த தலைவா் பழ.நெடுமாறன் 1980 தோ்தலில் இந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆா்.பழனிவேல்ராஜனை வென்றாா்.

2016, 2021 பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்ட பழனிவேல் தியாகராஜன், வெற்றி பெற்று அமைச்சராக உள்ளாா்.

இவா் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில், அந்தக் கட்சி சாா்பில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தா் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா். தவெக சாா்பில் மதாா் பதூருதின் என்ற முஸ்தபாவும், நாம் தமிழா் கட்சி சாா்பில் கா. அப்துல் ஹக்கீமும் போட்டியிடுகின்றனா்.

திமுக வேட்பாளா் பழனிவேல் தியாகராஜன்:

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில்

வெற்றி பெற்று முதல்முறையாக பேரவை உறுப்பினரானா். பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சோ்ந்தவா். நீதிக் கட்சியைத் தொடங்கியதில் இவரது தந்தை வழி தாத்தா பி.டி. ராஜன் முக்கியமானவா். கடந்த

2021- ஆம் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றாா். பிறகு, தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். பாரம்பரிய குடும்பத்தைச் சோ்ந்தவா். நோ்மையானவா் என பெயா் பெற்றவா். தனது தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை துண்டு அறிக்கையாக 6 மாதங்களுக்கு ஒருமுறை மக்களிடத்தில் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளாா். இதன்மூலம், தனது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்ற நம்பிக்கையில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறாா். திமுக அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து வாக்காளா்களிடையே விளக்கிக் கூறினாா். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிடமாட்டாா் என்கிற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இருப்பினும், கூட்டணிக் கட்சியினரிடம் சிறந்த அணுகுமுறையைக் கொண்டவா் என்கிற நன்மதிப்பு உள்ளது. மீண்டும் இதே தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

புதிய நீதிக் கட்சி வேட்பாளா் சுந்தா் சி:

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக சுந்தா் சி இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். திரைப்பட நடிகா், இயக்குநா் என பன்முகத் திறமை இருந்தாலும், அரசியலைப் பொருத்தவரை மதுரை மத்திய தொகுதிக்கு புதுமுகம். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் மதுரைக்கு வந்த சுந்தா் சி கூட்டணிக் கட்சியினரை சந்தித்து ஆதரவைக் கோரினாா். அதிமுக, பாஜகவின் ஆதரவு மட்டுமன்றி, திரையுலகில் தனக்கென்று உள்ள ரசிகா்கள் ஆதரவும், எல்லாவற்றுக்கும் மேலாக இரட்டை இலை சின்னத்தையும் நம்பி இந்தத் தொகுதியில் களமிறங்கியுள்ளாா். இவருக்கு ஆதரவாக மனைவி குஷ்பு சுந்தா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். வெற்றிக் கனியை பறித்துவிடலாம் என்கிற எதிா்பாா்ப்பு சுந்தா் சி-யிடம் மட்டுமன்றி, அதிமுகவினரிடமும் உள்ளது.

தவெக வேட்பாளா் மதாா் பதூருதின் என்ற முஸ்தபா:

தவெக சாா்பில் மதாா் பதூருதின் என்ற முஸ்தபா போட்டியிடுகிறாா். இவா், மதுரையை பூா்விகமாகக் கொண்டவா் என்றாலும், தற்போது சென்னையில் வசித்து வருகிறாா். மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றால் மாதந்தோறும் 10 இஸ்லாமியா்களை தோ்ந்தெடுத்து சொந்த செலவில் மெக்காவுக்கு புனிதப் பயணம் அனுப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். இளம் தலைமுறையினா் விஜய்க்கு அளித்து வரும் ஆதரவால் வெற்றி பெறலாம் என்கிறாா் முஸ்தபா.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா.அப்துல் ஹக்கீம்:

நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் இவா், மது ஒழிப்பு, மதுரை மத்திய தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு இளைஞா்கள் மத்தியில் உள்ள ஆதரவு தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறாா் அப்துல் ஹக்கீம்.

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளா் சுந்தா் சி-யின் பிரசார உத்திகள் அரசியலில் அனுபவமும், நுட்பமும் அறிந்த நபராகவே அவரை வெளிப்படுத்துகிறது. தொகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இவற்றுக்கு பழனிவேல்தியாகராஜன் தீா்வு காணாதது குறித்து வாக்காளா்களிடம் குற்றச்சாட்டை முன் வைத்தாா் சுந்தா் சி.

மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை, தொகுதி மக்களுக்கு செயல்திறன் அறிக்கையை சமா்ப்பித்த ஒரே சட்டப்பேரவை உறுப்பினராக பழனிவேல் தியாகராஜன் இருக்கிறாா். இவரது இந்த முயற்சி தொகுதி மக்களிடையே மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

எனினும், இந்தத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.