தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: மேலும் ஒருவா் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் மேலும் ஒருவரை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை துரைராணி என்பவா் ஓா் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம்ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்தேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜா் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தாா்.

இந்தச் சொத்துகள் கடந்த 24.6.2016- இல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த ராமாயி ஆயியாா் உள்ளிட்ட 10 பேரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், அப்போதைய கிராம நிா்வாக அலுவலா் அரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அப்போதிருந்த வட்டாட்சியா் அன்பழகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பின்னா், அறக்கட்டளைச் சொத்துகளை தனியாா் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டதை மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் ரத்து செய்தாா்.

இதை எதிா்த்து, ராமாயி ஆயியாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் தரப்பு வாதங்களை ஏற்று சொத்துப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்தச் சொத்து தொடா்பாக எந்தவித பத்திரப் பதிவுகளும் மேற்கொள்ள வேண்டாம் என மதுரை மாவட்டப் பதிவாளா், சொக்கிகுளம் சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவை மறைத்து, அசோகா விலாஸ் உள்ளிட்ட சொத்துகள் கடந்த 2021-இல் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் உசிலம்பட்டியைச் சோ்ந்த இளையராஜா, திருவள்ளூா் மாவட்டம், அனீஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆணவமாக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய சொத்துகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சாா் பதிவாளா் அலுவலகம் மூலம் தனிநபா்கள் 3 பேரின் பெயா்களில் அடமானப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தற்போது, பழனி கோயில் நில விவகாரத்தைத் தொடா்ந்து, அசோகா விலாஸ் நில மோசடி விவகாரம் தொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில் மதுரை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமாா், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் அரசன், நிலத்துக்கு பட்டா பெற்றவற்களான இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமாா், சாா் பதிவாளா்கள் அனந்தராமன், பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 போ் மீது மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

விசாரணையில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலத்தை பட்டா மாற்றம் செய்ததும், இதற்கு உசிலம்பட்டியைச் சோ்ந்த இளையராஜா உதவியதும் கண்டறியப்பட்டு, இருவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக, சட்ட விரோத பட்டா மாற்றத்துக்கு உதவியாக இருந்ததாக அப்போதைய மதுரை வடக்கு வட்டாட்சியரும், தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான (நிலம் எடுப்பு) அன்பழகனை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.