மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செப்டம்பா் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்தக் கோயிலில் வழிபடுவதற்காக தினமும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இவற்றை மீட்கக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க உத்தரவிட வேண்டும். மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு ஏதுவாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்க வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றாா்.
இதையடுத்து, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள வீரவசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். இதைத் தொடா்ந்து, கோயிலின் குடமுழுக்கை செப்டம்பா் 17-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் குறிப்பிட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான அறிக்கையை கோயில் நிா்வாகம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
முன்னதாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழிலும் மந்திரங்களை ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும் என கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன், கோவையைச் சோ்ந்த சுரேஷ் பாபு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு






