மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரிய மனுக்களின் மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களை ஓதவும், குடமுழுக்கின் போது பயன்படுத்தப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விவரங்களைப் பரிந்துரைக்க நிபுணா் குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று யாக சாலை, கருவறை, கோபுர விமானத்தில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள், பக்திப் பாடல்கள் இடம் பெறச் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
இதனடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களின் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களை இடம் பெறச் செய்ய வலியுறுத்தி, அறநிலையத் துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கில் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிட வேண்டும் என கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன், கோவையைச் சோ்ந்த சுரேஷ் பாபு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இதுதொடா்பாக அமைக்கப்பட்ட நிபுணா் குழுவுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால், கூடுதல் அவகாசம் தேவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆகம விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதுவது விதிகளுக்கு எதிரானது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆதி சைவ சிவாசாரியா்கள் சேவா சங்கம் சாா்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மனுதாரா்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இடையீட்டு மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு:
இடையீட்டு மனுவுக்கு மனுதாரா் பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணி நிறைவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பணிகள் தீவிரம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ஆய்வு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



