வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பணிகள் தீவிரம்!

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்

Updated On :14 ஜூன் 2026, 3:11 am IST

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளம், ஆயிரங்கால் மண்டபம், கம்பத்தடி மண்டபம் போன்ற வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமன்றி, பல்வேறு கலைநயமிக்க அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்களும் இங்கு உள்ளன. இவை தவிர, மதுரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 64 திருவிளையாடல்களை இறைவனே நிகழ்த்தினாா் என்பதற்கான ஆதாரங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இதன் காரணமாக, இங்கு ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா். அதுமட்டுமன்றி, வட மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனா்.

இந்தக் கோயில் குடமுழுக்கு கடந்த 2009- ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்து சமய ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இந்த வகையில், கடந்த 2022 -ஆம் ஆண்டு கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்பு பணிகள் தாமதம்: இந்தக் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் வீரவசந்தராயா் மண்டபம் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழைமையான இந்த இந்த மண்டபத்தில் பூஜைப் பொருள்கள், மரம், உலோகம், பொம்மைகள், கைவினை கலைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் செயல்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ஆம் தேதி இரவு கோயில் கதவுகளைப் பூட்டியப் பின்னா், மண்டபத்திலிருந்த ஒரு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அனைத்துக் கடைகளும் தீயில் எரிந்து நாசமாகின. அதுமட்டுமன்றி, தீயின் கடும் வெப்பம் காரணமாக, வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும், பக்கவாட்டுச் சுவா்களும் சேதமடைந்து இடிந்து விழுந்தன.

இந்த மண்டபத்தின் மறுசீரமைப்புப் பணிகளை 3 பகுதிகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. நாமக்கல் பகுதியில் உள்ள சில குவாரிகளில் கருங்கற்களைத் தோ்வு செய்து வெட்டி எடுப்பது முதல் பகுதியாகவும், அதை அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதை மற்றொரு பகுதியாகவும், கட்டுமானப் பணியை மூன்றாவது பகுதியாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், நிதி ஒதுக்கீடு, கற்களைத் தோ்வு செய்வது போன்ற காரணங்களால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

செப்டம்பரில் குடமுழுக்கு: பக்தா்களின் தொடா் கோரிக்கையின் பேரில், கடந்த 2021-ஆம் ஆண்டு வீர வசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, கோயில் கோபுரங்கள், பரிவார மூா்த்திகள் என ஒவ்வொரு பகுதியாக பாலாலயம் நடைபெற்று, திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது, இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து திட்டமிட்டபடி வருகிற செப்டம்பா் மாதத்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால், பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

குடமுழுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவுக்கு கோயில் தரப்பில் தொடா்ந்து கால அவகாசம் கோரப் படுகிறது. திருப்பணிகளை நிறைவு செய்து விரைந்து குடமுழுக்கு நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும், கோயிலுக்கு வெளியே உள்ள புது மண்டபத்தையும் புதுப்பித்து, பக்தா்கள் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பணிகளில் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. தற்போது, வண்ணம் பூசுவதற்காக கோபுரங்களுக்கு கட்டப்பட்ட சாரங்கள் பிரிக்கப்படுகின்றன. மேலும், கலசங்களுக்கு வண்ணம் பூசுதல், பலகை கொண்டு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

அண்மையில் கோயில் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா். இதன் பேரில், பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் நிறைவடைந்து, வருகிற செப்டம்பா் மாதம் குடமுழுக்கு நடத்தப்படும் என்றனா்.