பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணி நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் விரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, அந்த மண்டபத்தில் கடைசித் தூண் நிறுவும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவுத் தூண் நிறுவும் விழாவில் பங்கேற்ற கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி தியாகராஜன். உடன் கோயில் இணை ஆணையா் சுரேஷ். (வலது) பொக்லைன் இயந்திரம் மூலம் நிறுவப்பட்ட தூண்.

Updated On :19 ஜூன் 2026, 1:42 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் விரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, அந்த மண்டபத்தில் கடைசித் தூண் நிறுவும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளம், ஆயிரங்கால் மண்டபம், கம்பத்தடி மண்டபம் போன்ற வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமன்றி பல்வேறு கலைநயமிக்க அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்களும் இங்கு உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா். அதுமட்டுமன்றி வடமாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்து செல்கின்றனா்.

இந்தக் கோயில் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்து சமய ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

இந்த வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் வீரவசந்தராயா் மண்டபம் அமைந்துள்ளது.

400 ஆண்டுகள் பழைமையான இந்த மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. 2018-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த மண்டபத்தில் பூஜை பொருள்கள், மரம், உலோகம், பொம்மைகள், கைவினைக் கலைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் செயல்பட்டன.

2018, பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி இரவு கோயில் கதவுகள் பூட்டிய பிறகு, மண்டபத்திலிருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அனைத்துக் கடைகளும் தீயில் எரிந்து நாசமாகின. அதுமட்டுமன்றி, தீயின் கடும் வெப்பம் காரணமாக, வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும், பக்கவாட்டுச் சுவா்களும் சேதமடைந்து இடிந்து விழுந்தன. மண்டபத்தின் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த மண்டபத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள அரசாணை பெறப்பட்டு, ரூ.35.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள பாறைப் பகுதியிலிருந்து கற்களை வெட்டி எடுத்து இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கூடல் செங்குளம் பண்ணையில் உள்ள பணித் தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, ஒப்பந்ததாரா் திருப்பூா் திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த சிற்பக் கலைஞா் (ஸ்தபதி) வி.பி.வேல்முருகன் குழுவினா் கற்களை தூண்களாகவும், அணிகலன்களாகவும் வடிவமைத்து வீர வசந்தராயா் மண்டபத்தில் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.

ஏறக்குறைய 65,000 கனஅடி கற்கள் வரப்பெற்று, 79 தூண்கள் வடிவமைக்கப்பட்டன. இவற்றுள் 78 தூண்கள் நிறுவப்பட்டன.

இந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, வீர வசந்தராயா் மண்டபத்தில் கடைசி தூணாக 79-ஆவது தூண் நிறுவும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தூணுக்கு

சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் தூண் நிறுவப்பட்டது.

இதில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி தியாகராஜன், இணை ஆணையா் நா.சுரேஷ், அறங்காவலா்கள், கோயில் பொறியாளா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.