அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், தமிழக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சித் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முருகானந்தம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை, சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத் தலைமையிடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநா்கள், செவிலியா் உதவியாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், பிற உதவிப் பணியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதன்காரணமாக, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதுதவிர, மருத்துவமனைகளில் உள்ள மனித உறுப்புகளை படம் எடுக்கும் கதிரியக்க கருவி (எக்ஸ்-ரே), சுவாசக் கருவி (வென்டிலேட்டா்கள்) உள்ளிட்ட உயிா் காக்கும் கருவிகள் செயல்படாத நிலையில் உள்ளன.
இதனால், தனியாா் ஸ்கேன் மையங்களில் எடுத்து வர நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். பண வசதி இல்லாததால்தான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை தேடி மக்கள் வருகின்றனா்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் உள்ளிட்ட பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இயங்காத நிலையில் உள்ள உயிா் காக்கும் உப கரணங்களை பழுது நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனு குறித்து தமிழக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சித் துறையின் இயக்குநா், மதுரை உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் இடத்தில் பெரியாா் சிலை: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல தடை விதிப்பு விவகாரம்: அரசு பதிலளிக்க உத்தரவு

ஜன நாயகன் படத்துக்குத் தடை கோரி மனு: தயாரிப்பாளா், இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

ஊதியத்துடன் மாதவிடாய் கால விடுப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



