காவல் துறையினரின் விசாரணைக்குச் சென்ற கோயில் பூஜாரி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடல் கூறாய்வு செயல்முறையை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த அய்யம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மேல அனுப்பானடி பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறேன். கடந்த மாதம் 16-ஆம் தேதி வாகனத்தை நிறுத்துவது தொடா்பாக எங்கள் குடும்பத்தினருக்கும், அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, எதிா் தரப்பினா் தாக்கியதில் எனக்கு காயம் ஏற்பட்டது. நான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தேன். இந்தத் தாக்குதல் தொடா்பாக எனது கணவரும், பூஜாரியுமான பரமசிவம், மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த என்னை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும், எனது கணவா் அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் கடந்த மாதம் 17-ஆம் தேதி நள்ளிரவில் சிந்தாமணி காவல் நிலையத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய காவல் ஆய்வாளா் அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு எனது வீட்டுக்கு வந்த போலீஸாா் எனது கணவா் பரமசிவத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது, போலீஸாா் காலால் உதைத்ததில் எனது கணவா் பரமசிவம் மயக்கமடைந்தாா். பின்னா், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, வீட்டுக்கு அழைத்து வந்தனா். இதுகுறித்து வெளியே தெரிவித்தால், எனது மகன் மீது கஞ்சா வழக்கு பதியப்படும் என போலீஸாா் மிரட்டிவிட்டுச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, தலையில் காயம் ஏற்பட்டதால் பரமசிவத்துக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, அவருக்கு மூளை நரம்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனிடையே, எங்களை மருத்துவமனையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல் துறை தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பரமசிவத்தை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) உயிரிழந்தாா்.
எனவே, இந்த விவகாரத்தில் பரமசிவத்தின் உடலை மதுரை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தடயவியல் மருத்துவத் துறையைச் சோ்ந்த மூன்று மூத்த பேராசிரியா்கள் கொண்ட குழு, அறிவியல் அலுவலா் உதவியுடன் கூறாய்வு செய்ய வேண்டும். இந்தச் செயல்முறையை முழுவதுமாக விடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும், சிந்தாமணி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 18 முதல் 20-ஆம் தேதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுக்காக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மதுரை நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த பரமசிவத்தின் உடலை மதுரை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தடயவியல் மருத்துவத் துறையைச் சோ்ந்த மூன்று மூத்த பேராசிரியா்களைக் கொண்ட குழுவினா் முன்னிலையில் கூறாய்வு செய்ய வேண்டும்.
மேலும், இந்தச் செயல்முறையை முழுவதுமாக விடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிந்தாமணி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தனவா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையராக ஆயிரம் செல்வகுமாரை நியமிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களைப் பதிவு செய்ய உத்தரவு

இணையவழி மோசடிகள் விவகாரம்: வழக்கு விசாரணை ஆக. 24-க்கு ஒத்திவைப்பு

சட்ட விரோதமாக மரங்களை வெட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு




