
குற்ற வழக்கில் எண்ம வகையான ஆதாரங்கள் பதிவு விவகாரம்: டிஜிபி வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க உத்தரவு

உத்தரவு - கோப்புப் படம்
குற்ற வழக்கில் எண்ம (டிஜிட்டல்) ஆதாரங்களைப் பதிவு செய்யும் விவகாரத்தில், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள ஆலத்தூரைச் சோ்ந்தவா் வீரமலை. இவருக்கும் ரஹ்மான்கான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப். 5-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ரஹ்மான்கான், வீரமலையை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வீரமலை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஊமச்சிகுளம் போலீஸாா் ரஹ்மான்கான் மீது கொலை, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யவும், தனக்கு பிணை வழங்க உத்தரவிட வேண்டும் என ரஹ்மான்கான் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மனுதாரா் 110 நாள்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால், அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளி தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிமென்ட் கல்லை போலீஸாா் தற்போது வரை கைப்பற்றவில்லை. பாதிக்கப்பட்ட நபரின் காயங்களையோ, சம்பவம் நடந்த இடத்தையோ காட்டும் ஒரு புகைப்படத்தைக்கூட வழக்குப் பதிவேட்டில் போலீஸாா் இணைக்கவில்லை.
புதிய சட்டங்களின்படி 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக்குரிய தீவிர குற்ற வழக்குகளில் விடியோ பதிவு செய்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இதை போலீஸாா் கடைப்பிடிப்பதில்லை. இதனால், நீதிமன்றத்தாலும் வழக்கின் உண்மைத்தன்மையை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் தலையிட்டு (டிஜிபி) குறைந்தபட்சம் தீவிரமான குற்ற வழக்கிலாவது எண்ம ஆதாரங்களைப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




