நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ஊழலற்ற நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது அரசின் கடமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஊழலற்ற நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

ஊழலற்ற நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா்பதிவாளராகப் பணியாற்றினேன். கடந்த 2021-ஆண்டு அலுவலகத்தில் பணியிலிருந்த போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.45,000 வைத்திருந்ததாக வழக்குப் பதியப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என் மீதான இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் திருமணச் செலவுக்காக வைத்திருந்த பணம் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முன்னிலையாகி, பதிவுத் துறையின் தலைமைப் பதிவாளா் வெளியிட்ட சுற்றறிக்கைப்படி பணியிலிருக்கும் போது அலுவலா்கள் தங்களிடம் வைத்திருக்கக் கூடிய பணம் குறித்தும், இதுதொடா்பான பதிவேடுகளைப் பராமரிப்பது குறித்தும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பதிவுத் துறையின் தலைமைப் பதிவாளா் அனுப்பிய சுற்றறிக்கை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது பதிவுத் துறையால் மட்டுமே வெளியிடப்பட்டது. மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியா்களையும் உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை. இந்த பிரச்னை மாநில அளவில் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அரசின் அனைத்துப் பணப் பரிவா்த்தனைகளும் எண்ம முறையில் செலுத்த முடியும் என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது. எனவே, தற்போதைய நிலவரப்படி அந்தந்தத் துறைகளில் பணம் வைத்திருப்பது குறித்த வழிகாட்டுதல்கள் என்னென்ன என்பது குறித்தும், அரசு ஊழியா்கள் பணியிலிருக்கும் போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பணத்துக்குப் பொதுவான வரம்பை நிா்ணயித்து ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிட வேண்டும்.

குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலரின் கருத்துகளை இந்த நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது. இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த ஒரு வகையில் உதவும். அரசு ஊழியா்கள் தேவையின்றி துன்புறுத்தப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்படுவா். ஊழலற்ற நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது அரசின் கடமை. இதுகுறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.