காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் திறப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதிதாக சீரமைக்கப்பட்ட வீரவசந்தராயா் மண்டபத் திறப்பு விழாவில் கல் தூண்களுக்கு தீபாராதனை காண்பித்த சிவாசாரியா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

மதுரை, ஆக. 30: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி சந்நிதி முன்பாக புதிதாக சீரமைக்கப்பட்ட வீரவசந்தராயா் மண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சுவாமி சந்நிதி முன்பாக வீரவசந்தராயா் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் கடந்த 2018- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின. மேலும், வீரவசந்தராயா் மண்டபமும் முழுமையாகச் சேதமடைந்தது. இதையடுத்து, இந்த மண்டபத்தைச் சீரமைக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து, மதுரை கூடல்செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சிற்பக் கூடத்தில் வைத்து 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் உள்ளிட்டவற்றை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டன. பணிகள் தொடங்கிய போது, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளால் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. கரோனா பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு, வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் ரூ. 38.30 கோடியில் தொடங்கின.

திருப்பூா் திருமுருகன்பூண்டி ஸ்தபதி வி.பி. வேல்முருகன் தலைமையில் சிற்பங்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் 18-ஆம் தேதி இந்த மண்டபத்தில் 79 தூண்களும் நிறுவப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.

இதையடுத்து, வீரவசந்தராயா் மண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை புண்யாஹவாசனம், பஞ்சாஸ்த்சிர ஜபம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் யானை, கோயில் காளை கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டன.

இதன் பிறகு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தன. பின்னா், வீர வசந்தராயா் மண்டபத் தூண்களுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எஸ். ஆா். தங்கப்பாண்டி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, உதவி ஆணையா் சீ. மெய்வேல், அறங்காவலா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், சிவாசாரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு கோபுரத்தில் பக்தா்களுக்கு அனுமதி:

வீரவசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணி காரணமாக, கீழச்சித்திரை வீதியில் சுவாமி சந்நிதி கிழக்கு கோபுரம் வழியாக பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. புதிதாக சீரமைக்கப்பட்ட வீரவசந்தராயா் மண்டபம் திறக்கப்பட்டதை முன்னிட்டு, கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் சுவாமி சந்நிதி கிழக்கு கோபுரம் வழியாக பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் வழக்கம் போல அந்த வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.