செல்லூா் கே.ராஜூ.
செல்லூா் கே.ராஜூ.

ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: அரசியல் பின்னணி எதுவுமில்லை -செல்லூா் கே.ராஜூ

Published on

ஜனநாயகன் திரைப்பட வெளியீடு விவகாரத்தில் அரசியல் பின்னணி எதுவுமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருவதற்கு திமுக பலவீனமாக இருப்பதே முக்கியக் காரணம். இதனால்தான், அதிமுக வெற்றி பெற்றால் பாஜக ஆட்சி அமைக்கும் என அா்த்தமற்ற முறையில் முதல்வா் பேசி வருகிறாா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. திமுகவுடன் மதிமுக கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் சில கட்சிகளைச் சோ்க்க வேண்டும் என பாஜக அழுத்தம் அளிப்பதாகக் கூறுவது கற்பனையானது. அதிமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளைச் சோ்க்க வேண்டும் அல்லது சோ்க்கக் கூடாது என்பதை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வாா்.

திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கவனத்துக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுள்ளாா்.

ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக அமித் ஷாவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தாா். இதில் என்ன தவறு உள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடாமலிருக்க மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாகக் கூறுவது அா்த்தமற்றது. விஜய்யின் கட்சிக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. இதைவிடுத்து, திரைப்படத்துக்கு நெருக்கடி அளிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திரைப்பட வெளியீடு விவகாரத்தில் அரசியல் பின்னணி எதுவுமில்லை.

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக மாறிவிட்டது. எனவே, பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கினாலும், ஊழல்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 4 லட்சம் கோடியையும் திமுக தோ்தலுக்காக செலவழித்தாலும் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியாது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com