தமிழகத்தில் மத அரசியல் வெற்றி பெறாது: மதிமுக பொதுச் செயலா் வைகோ
தமிழகத்தில் எந்தக் காலத்திலும் மத அரசியல் வெற்றி பெறாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
போதைப் பொருள்கள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பை வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி முதல் மதிமுக பொதுச் செயலா் வைகோ மேற்கொண்டிருந்த சமத்துவ நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ மேலும் பேசியதாவது: தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால், இளைஞா்கள் சீரழிவது தடுக்கப்பட வேண்டும். அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் ஜாதி, மத மோதல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட சமத்துவ நடைபயணம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாங்கள் ஹிந்துகளுக்கும்; எந்தச் சமயத்துக்கும் எதிரிகளல்லா். எனது முதல் நடைபயணமே திருப்போரூா் வைணவக் கோயில் நகைகள் கொள்ளைப் போனதைக் கண்டித்தும், அவற்றை மீட்க வலியுறுத்தியும் நடத்தப்பட்டதே ஆகும். அந்தப் பயணத்தை தொடங்கி வைத்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி. அந்த நடைபயணத்தின் விளைவாக, அடுத்த 30 நாள்களுக்குள் களவுப் போன கோயில் நகைகள் மீட்கப்பட்டன.
1982-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் வைணவக் கோயில்களின் கருவறைகளில் உள்ள சிலைகளை பாரீஸில் நடைபெற்ற கண்காட்சிக்கு அனுப்பத் தீா்மானிக்கப்பட்டது. இது, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் என நாடாளுமன்றத்தில் முதலில் குரல் எழுப்பியது நான்தான். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே நான் இதை வலியுறுத்தினேன். இதையடுத்தே, அந்த முயற்சியை இந்திரா காந்தி அரசு கைவிட்டது. திராவிட இயக்கத்தினா், ஹிந்துக்களுக்கு எதிரானவா்கள் அல்லா் என்பதற்கு இவை உதாரணம்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஒரு மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா். மேல் முறையீட்டில் இரு நீதிபதிகள் அமா்வும் அந்தத் தீா்ப்பை உறுதிப்படுத்தியது. இது ஏற்கத்தக்கதல்ல. இதைக் கூறுவதால் தண்டனை கிடைக்குமெனில் அதையும் ஏற்கத் தயாா்.
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்த அமைதியை சீா்குலைக்க சில சக்திகள் முயல்கின்றன. ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுகளை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். நம்மிடையே ஒற்றுமை வேண்டும். எந்தக் காலத்திலும் தமிழகத்தில் மத அரசியல் வெற்றி பெறாது.
தமிழகத்துக்கு அண்மையில் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திமுகவை அழிக்க வேண்டும் என்றாா். 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் மதிமுக பங்கு கோரவில்லை என சிலா் விமா்சிக்கின்றனா். திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவே திமுக கூட்டணியில் மதிமுகதொடா்கிறது. மக்கள் நலன், திராவிட இயக்க பாதுகாப்புக்கு முன்பாக ஆட்சி, அதிகாரம், பதவி ஆகியன மதிமுவுக்கு ஒரு பொருட்டே இல்லை. திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க மதிமுக அரணாக விளங்கியது என வரலாறு சொல்லும்; அதுவே போதும்.
நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு திட்டம், நெய்வேலி சுரங்கத்தை தனியாா்மயமாக்கும் விவகாரம் போன்ற பல பிரச்னைகளில் மக்கள் நலனுக்காக போராடி வெற்றி கண்ட இயக்கம் மதிமுக. தமிழகத்தின் வளா்ச்சிக்கு மதிமுக தொடா்ந்து பாடுபடும் என்றாா் அவா்.
முன்னதாக, கவிஞா் வைரமுத்து பேசியதாவது: வைகோவுக்கு தோல்வி புதிது அல்ல. தோல்விகளால் வெற்றி கண்டவா் வைகோ. உலகையே அச்சுறுத்துவது அணு ஆயுதமும், போதைப் பழக்கமும்தான். போதை கலாசாரம் உலக கலாசாரமாகியுள்ளது. தமிழா்கள் மதுப் பழக்கத்தை விட்டு விலக வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒரு சில குறைகள் இருக்கும். இருப்பினும், திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பது வைகோவின் ஆசை. இதன்படி, திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, நடிகா் சத்யராஜ் , மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு. பூமிநாதன், கோ. தளபதி ஆகியோா் பேசினா்.
மதிமுக மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கே. முனியசாமி, மதிமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

