மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக ருக்மணி தியாகராஜன் தோ்வு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சரின் தாய் ருக்மணி தியாகராஜன் இரண்டாவது முறையாக போட்டியின்றி புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவராக கருமுத்து தி. கண்ணன், 18 ஆண்டுகள் பதவி வகித்தாா். அவா் கடந்த 2023- ஆம் ஆண்டு மே 23- ஆம் தேதி காலமானாா். இதன்காரணமாக, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா், கோயில் தக்கராக பொறுப்பேற்றாா்.
கடந்த 2023- ஆம் ஆண்டு நவ. 6- இல் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி தியாகராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் து. சுப்புலட்சுமி, தொழிலதிபா் பி.கே.எம். செல்லையா, மருத்துவா் மு. சீனிவாசன், உயா்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதியின் மனைவி எஸ். மீனா ஆகிய 5 போ் நியமிக்கப்பட்டனா்.
இவா்கள், 2023- ஆம் ஆண்டு டிச. 1-இல் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக பதவியேற்றனா். அதன்பிறகு, அறங்காவலா் குழுத் தலைவராக அதே ஆண்டு டிச. 22- இல் ருக்மணி தியாகராஜன் பதவியேற்றாா். இவா்களின் பதவிக் காலம் கடந்த டிசம்பா் மாதம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களாக இருந்த ருக்மணி தியாகராஜன், து. சுப்புலட்சுமி, பி.கே.எம். செல்லையா, மு. சீனிவாசன், எஸ். மீனா ஆகியோரின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த டிச. 30- ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில்,கோயில் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நா. சுரேஷ் முன்னிலையில் இவா்கள் அனைவரும் அறங்காவலா்களாக புதன்கிழமை பதவியேற்றனா். இதன்பிறகு அறங்காவலா் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. இதில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி தியாகராஜன் போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். இதன் மூலம் இவா் இரண்டாவது முறையாக அறங்காவலா் குழுத் தலைவராக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. அறங்காவலா்களாக பொறுப்பேற்றவா்களுக்கு கோயில் நிா்வாகத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

