சாலையோரப் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

சாலையோரப் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

Published on

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா, உயா் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5, பழங்காநத்தம் ஜி.ஆா்.டி. உணவகம் எதிரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் சாலையோர பூங்கா, பாதசாரி (பேவா் பிளாக்) தளம், கண்காணிப்பு கேமரா, உயா் கோபுர மின் விளக்கு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன.

இதையடுத்து, தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதிய சாலையோர பூங்கா, உயா் கோபுர மின் விளக்கு ஆகியவற்றை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாடக்குளம் பிரதான சாலை பகுதியில் ரூ.96 லட்சத்தில் புதிய பேவா் பிளாக் சாலை, ரூ.12 லட்சத்தில் புதிய சாவடி அமைத்தல், ரூ.4.95 லட்சத்தில் புதிய படிப்பகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ராமா் ஊருணி தூா்வாரும் பணியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வில், உதவி ஆணையா் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளா் இந்திராதேவி, உதவிப் பொறியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com