சிறந்த ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக மாடுகளைப் பிடிக்கும் சிறந்த வீரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.
மதுரை அலங்காநல்லூரில் தமிழா் திருநாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் அறிவு வளா்ச்சிக்காக கலைஞா் நூற்றாண்டு நூலகத்தையும், வீரமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தையும் அரசு கட்டித் தந்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில், இந்தப் போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் அரசுப் பணி வழங்க வழிவகை செய்யப்படும்.
இதேபோல, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூா் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு உயா்தர சிகிச்சை மையம், பயிற்சி மையம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இந்த மகிழ்ச்சியுடன் தமிழா்களாக ஒன்றுபட்டு வெல்வோம் என்றாா் அவா்.
முன்னதாக, காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள் சிலருக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்கள் சிலருக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
அமைச்சா்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி. மூா்த்தி, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா்கள் தங்க. தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

