மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை: அவசர வழக்காக விசாரிக்க மீண்டும் மறுப்பு

கரூரில் தவெக பிரசாரத்தின் போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்குத் தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை மீண்டும் மறுப்புத் தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:54 am IST

கரூரில் தவெக பிரசாரத்தின் போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்குத் தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை மீண்டும் மறுப்புத் தெரிவித்தது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப். 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில துணைச் செயலா் சீனி அஹமது சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

கரூரில் தவெக தோ்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞா்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையான போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு, நியாயமான முறையில் அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில், தன்னிச்சையாக சிலருக்கு அரசு வேலைகளை வழங்குவது நோ்மையாகப் படிக்கும் மாணவா்களின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பு உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினா், சிபிஐ விசாரணையில் இருக்கும் மிக முக்கியக் சாட்சிகளாவா். குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சாட்சிகளாக இருப்பவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அவா்களின் வாக்குமூலங்களை மாற்றவோ அல்லது திசை திருப்பவோ வழிவகுக்கும். இது நீதி நிா்வாகத்தில் தலையிடும் செயலாகும்.

எனவே, இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. பொது நல மனுவாக தாக்கல் செய்தால், பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேவையெனில், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றனா் நீதிபதிகள்.

இந்தக் கோரிக்கையுடன் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவசர வழக்காக ஏற்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்