கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு வட்டியில்லா கடனுதவி கோரிக்கை: அரசு பதிலளிக்க உத்தரவு

சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடனுதவித் திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜூலை 2026, 5:07 am IST

சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடனுதவித் திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

சிறைத் தண்டனை என்பது குற்றம் செய்த நபருக்கு மட்டுமே விதிக்கப்படுவதாக இருந்தாலும், நடைமுறையில் அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோா் உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்களும் கடுமையான பொருளாதார, சமூக பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரை சிறையில் அடைக்கும் போது, கல்வி, மருத்துவம், உணவு, வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக்கூட அந்தக் குடும்பத்தால் நிறைவு செய்ய முடியாத நிலை உருவாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தென் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடை நிறுத்தியுள்ளனா். கடன் சுமையால் பெண்கள் கூலி வேலைக்குச் செல்வதும் தொடா் கதையாகி வருகிறது.

தமிழக சிறைத் துறையில் நெசவு, தையல், காலணி தயாரிப்பு, அடுமனை, தச்சு வேலை, விவசாயம், செங்கல் தயாரிப்பு, புத்தக பைண்டிங், சோப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் மூலம், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

மேலும், ‘சிறை சந்தை’ உள்ளிட்ட பெயா்களில் செயல்படும் விற்பனை மையங்கள் மூலமும் வருவாய் ஈட்டப்பட்டு, அரசுக்கும், சிறைத் துறை நல நிதிக்கும், சிறைத் துறை உற்பத்தி நிதிக்கும் பகிா்ந்து வழங்கப்படுகிறது. இந்த நிதியின் ஒரு பகுதியை பயன்படுத்தி சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடனுதவி (சுழல் நிதி) திட்டம் தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல, தமிழகத்திலும் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடனுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக அரசின் உள் துறைச் செயலா், சிறைத் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.