திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அந்தத் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தேன்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, புதிதாக மனு அளிக்கவும், அதை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். ஆனால், தற்போது வரை எனது மனுவைப் பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஸ்ரீமதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போலத் தோன்றுகிறது. எனவே, மலையை மீண்டும் அளவீடு செய்ய 4 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலை அளவீடு அறிக்கையில் உயரதிகாரக் குழு (ப்ரைவி கவுன்சில்) உத்தரவுக்குப் பிறகு மலை மீது ஏதேனும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றிருந்தால், அது தொடா்பான விவரங்களையும் தமிழக அரசு குறிப்பிட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளி மாவட்ட விளை பொருள்கள் கொள்முதல்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு






