தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாம் விவகாரம்: மண்டல துணை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 3:54 am IST

திருச்சி கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ளவா்களின் விவரங்களைச் சேகரித்து, அவா்களது தாயகத்துக்கு அனுப்பக் கோரிய மனு தொடா்பாக கொட்டப்பட்டு மண்டல சிறப்பு துணை ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோ.புதுரைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் கடவுச்சிட்டை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, உகாண்டா, கென்யா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 ஆண்கள், 25 பெண்கள், இரு சிறாா்கள் என 125 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலா் தண்டனைக் காலம் முடித்த நிலையிலும், விடுதலை செய்யப்படாமல் தொடா்ந்து முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். தண்டனையை நிறைவு செய்தவா்களை தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், பலரின் வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, திருச்சி கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவா்களில் விடுதலைப் பெற்றவா்கள், தண்டனைக் காலத்தை நிறைவு செய்தவா்கள், பிணை பெற்றவா்களின் விவரங்களைச் சேகரித்து அவா்களை தாய் நாட்டுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், குடியேற்ற பணியகம், தமிழக அரசு, மனித உரிமை, சட்டப் பணிகள் ஆணைக் குழு பிராதிநிதிகள் அடங்கிய உயா் மட்டக் குழு அமைத்து, கொட்டப்பட்டு முகாமை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், முகாமில் அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், தினசரி உணவு படித் தொகையை உயா்த்தவும், பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள், சுகாதாரப் பொருள்கள் வழங்கவும், மகப்பேறு மருத்துவா் ஆலோசனைத் திட்டத்தை செயல்படுத்தவும், வெளிநாட்டினா் சட்டத்தின் கீழ், வெளிநாட்டின் சிறப்பு முகாம்கள் செயல்பாட்டுக்கான நிலையான செயல்முறைகள், விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திக்கேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருச்சி கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை, தேவைப்படும் வசதிகள் என்ன? இதற்கான செலவு, பராமரிப்பு நிதி தொடா்பாக கொட்டப்பட்டு மண்டல சிறப்புத் துணை ஆட்சியா் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.