கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு பட்டா மாறுதல் செய்து வழங்கும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி, கல்யாண பசுபதீசுவரா், ரவீசுவரா், குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3,084.95 ஏக்கா் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்கள் 3,390 பேருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவா்களது பெயா்களில் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்களுக்கு பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பதிவுத் துறை விதித்திருந்த தடையை நீக்கி, கரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இது முன்அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்கிறது.
எனவே, பதிவுத் துறை விதித்திருந்த தடையை நீக்கி, கரூா் மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரூா் மாவட்ட ஆட்சியா், கரூா், சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்கள் ஆகிய மூவரும் ஒரே நாளில் தடை உத்தரவை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளனா் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘முந்தைய காலத்தில் கோயில்களுக்கு முன்னதாக, சில இனாம் நிலங்கள் வழங்கப்பட்டன. 1965, 1967-ஆம் ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, பலருக்கு மாற்றியும் விற்பனை செய்யபட்டது. இதுதொடா்பாக விசாரித்ததில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக மனு அளித்தவா்கள் அங்கு வசிப்பது தெரியவந்தது. இவா்களது கோரிக்கையின் அடிப்படையிலேயே தடை நீக்கப்பட்டது. மேலும், கோயில் தரப்பினருடன் ஆலோசனை செய்தே இந்த முடிவெடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடா்பில்லாத மூன்றாம் நபா் வழக்குத் தொடுக்க இயலாது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பே பணப் பரிவா்த்தனை இல்லாத தீா்வுப் பத்திர பட்டா (செட்டில்மென்ட் பட்டா) வழங்கப்பட்டவா்களின் கோரிக்கை அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கோயில்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்பது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுத் தரப்பில் வருகிற 29-ஆம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








