தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

சீமான் மீதான அவதூறு: நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 6:00 am IST

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சமூக வலைதளமான யூடியூபில் ‘வலைப்பேச்சு மீடியாவை‘ சோ்ந்த பிஸ்மி, தமிழன் கோகுல் உள்ளிட்டோா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடனும் விடியோக்கள் பதிவேற்றம் செய்து, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனா்.

அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்த அவதூறு பிரசாரம் குறித்து காவல் துறையில் பல முறை புகாா் அளித்தும், இதுவரை முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவதூறு பரப்பியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ். ரமேஷ், ரூ. 100 கோடி பெற்றாா் என யூடியூபில் ஒருவா் பேசியதற்காக உடனடியாக வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைத்தனா். ஆனால், சீமான் குறித்து அவதூறாகப் பேசினால் நடவடிக்கை எடுக்க காவல் துறை மறுக்கிறது என்றாா்.

அப்போது, ‘தமிழக முதல்வா் குறித்து அவதூறு பேசுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல் துறை கைது செய்கிறது. ஆனால், சீமான் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?,’ காவல் துறை பாரபட்சம் பாா்க்கிா? என நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பினாா். மேலும், சீமானைப் பொருத்தவரை, தோ்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால், தமிழகத்தில் தவிா்க்க முடியாத ஓா் அரசியல்வாதியாக அவா் உருவெடுத்துள்ளாா். ஓா் அரசியல் கட்சித் தலைவா் குறித்து அவதூறாகப் பேசுவதை வேடிக்கை பாா்க்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

சீமான் குறித்து யூடியூபில் அவதூறாக விமா்சிக்கப்பட்டதை ஏற்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் குற்றப் பிரிவு காவல் துறையினா் உடனடியாக வழக்குப் பதிந்து புதன்கிழமை (ஜூலை 29) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இதுதொடா்பான விடியோக்களையும் நீக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.