மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கக் கோரிய வழக்கு: ஆக.24-க்கு ஒத்திவைப்பு

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்கக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளா்கள், மாதவிடாய் காலங்களில் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. இது பெண்களின் உடல் நலம், மனநலத்தைப் பாதிக்கும். எனவே, பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை தமிழக அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த நா்மதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது தொடா்பான ஆலோசனை நடத்துவதற்கு முதல் கட்டமாக குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், ஆலோசனைக் குழு அமைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டியுள்ளது என அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக உரிய பதிலையும், இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக ஆலோசனைக் குழு அமைப்பது குறித்தும் அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.