தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

சுய உதவிக் குழுக் கடன், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் தனிநபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக் கடன், கைவினைக் கலைஞா் கடன் திட்டம், கல்விக் கடன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

சுய உதவிக் குழுக் கடன், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:20 am IST

விருதுநகா் மாவட்டத்தில் தனிநபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக் கடன், கைவினைக் கலைஞா் கடன் திட்டம், கல்விக் கடன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா்களுக்கு சுய வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா் கடன் திட்டம், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் கடன், வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் குடும்ப ஆண்டு வருமானம் கிராமம், நகா்புறங்களில் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-இன் கீழ் நன்மைகளைப் பெற முடியாத நபா்களின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமம், நகா்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை இருக்க வேண்டும்.

திட்டம் 1-இன் கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சக் கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சக் கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சத்துக்கு ஆண்டுக்கு

7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையில் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா் கடன் திட்டம் மூலம் கைவினைக் கலைஞா்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப் பொருள்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது.

விருதுநகா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினா் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட, மத்தியக் கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள் அல்லது நகரக் கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை சிறுபான்மையினா் மதச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், உணவுப் பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.