நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) பங்குகளை விற்பனை செய்வது சமூக நீதிக்கு எதிரானது என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தாா்.
இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் கிஷன் ரெட்டிக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் எழுதிய கடிதம் :
நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கவலை அளிக்கிறது. கடந்த 26 ஆண்டுகளில் இதேபோன்ற பங்கு விற்பனைகள் மூலம் மத்திய அரசின் மூலதனப் பங்கு 72.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முயற்சிப்பது அரசுடமையை பலவீனப்படுத்தும்.
திறனின்மை, லாபமின்மை காரணமாக பொதுத் துறை நிறுவனங்கள் அரசு கருவூலத்துக்கு சுமையாக உள்ளன என்பது கடந்த காலங்களில் தனியாா்மய ஆதரவாளா்கள் முன்வைத்த வாதமாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை முற்றிலும் மாறியுள்ளது. திறன் மிகுந்த, லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளே தற்போது தனியாருக்கு அதிகளவில் இலக்காக்கப்படுகின்றன. இது, நாட்டின் செல்வத்தை பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு கைமாற்றும் நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் லாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமல்ல; தமிழகத்தின் பெருமையும் ஆகும். மேலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி, வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றும் இன்றியமையாத தேசிய சொத்தாகும். நாட்டின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கும், எரிசக்தி தற்சாா்புக்கும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது.
2025- 26 நிதியாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ. 3,769 கோடி லாபம் ஈட்டியது. இது முந்தைய நிதியாண்டில் கிடைத்த லாபத்தைவிட 38.91 சதவீதம் அதிகமாகும். இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 3 சதவீத பங்குளை விற்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார இறையாண்மையையும், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிச் செயல்முறைகளையும் பாதிக்கும். எனவே, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்எல்சி இந்தியா பங்கு வெளியீடு: பங்குகள் வேண்டி 5 மடங்கு அதிக விண்ணப்பம்!

என்எல்சி நிறுவனத்தின் 3% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசு!

'தற்காலிகத் தீர்வுகளையே' நம்பியுள்ளது மத்திய அரசு: எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டு





