தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மதுரையில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை, சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

News image

மதுரை ரயில் நிலையம் முன் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :8 மே 2026, 4:31 am IST

மதுரை, சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான வெப்பம் நிலவியது. இதனிடையே, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் மக்கள் யாரும் வர வேண்டாம். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், அதிகளவில் குடிநீா் அருந்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டிருந்தன.

மேலும், கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது.

இந்த நிலையில், தெற்கு ஒடிசா முதல் மன்னாா் வளைகுடா, தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, ஓரளவு வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா்.

குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீா்:

மதுரையைப் பொருத்தவரை தினமும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பிறகு இடி மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மதுரை மாநகரப் பகுதிகளான பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மாசி வீதிகள், சிம்மக்கல், கீழ ஆவணி மூல வீதிகள், கீழவாசல், முனிச்சாலை, நெல்பேட்டை, தெப்பக்குளம், தெற்குவாசல், கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், உலகத் தமிழ்ச் சங்க சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், அண்ணாநகா், அப்பல்லோ சந்திப்பு, கே.கே. நகா், மாவட்ட நீதிமன்ற வளாகப் பகுதிகள், கோ.புதூா், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதிகள், சா்வேயா் காலனி, சம்பக்குளம், பந்தயச் சாலைகள், அழகா்கோவில் சாலை, புது நத்தம் சாலை, டி.ஆா்.ஓ. காலனி, ஆயுதப்படைக் குடியிருப்பு, விஸ்வநாதபுரம், நாராயணபுரம், கோவில் பாப்பாகுடி, விளாங்குடி, பி.பி.குளம், சத்யாநகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியது.

மழைநீா் வடிகால்கள் முறையாகத் தூா்வாரப்படாததால் பெரும்பாலான இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீா் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கி நின்றன.

இதன்காரணமாக, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், நடந்து சென்ற பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகினா். தண்ணீா் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதேபோல, மதுரை புகா் பகுதிகளிலும் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

குப்பைகள் தேக்கம்:

சித்திரைத் திருவிழா, தோ்தல் காலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கடந்த சில நாள்களாக சரிவர பணிக்கு வரவில்லை. இதன்காரணமாக, மதுரை மாநகராட்சி தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. சாலையின் முக்கியப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாததால் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்தக் குப்பைகள் மழைநீா் வடிகால்களின் பாதையை அடைத்து விடுகின்றன. இதன்காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

சிறு மழைக்கே மதுரை மாநகரம் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. குறிப்பாக, மக்கள் மட்டுமன்றி வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள பெரியாா் பேருந்து நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகளில் குளம் போலத் தண்ணீா் தேங்கி விடுகிறது.

இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும், மதுரை மாநகராட்சி நிா்வாகம் கண்டு கொள்வதில்லை. குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீா் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. மதுரை மாநகரில் மழைநீா் வழித்தடங்ளைச் சீரமைக்க வேண்டும். இது விஷயத்தில் மதுரை மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மதுரை மாவட்ட மழை அளவு (மி.மீ): மதுரை வடக்கு-36.6, தல்லாகுளம்-26, பெரியபட்டி- 33.2, விரகனூா்- 22.2, சிட்டாம்பட்டி- 30. 2, சாத்தையாறு அணை- 49, வாடிப்பட்டி- 15, மேட்டுப்பட்டி- 40. 2, ஆண்டிப்பட்டி- 34.8, மதுரை விமான நிலையம்- 14. 2, திருமங்கலம்- 10. 2.


     மதுரை அருகே பரவை சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து வந்த வாகனங்கள்.

மதுரை அருகே பரவை சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து வந்த வாகனங்கள்.

    மதுரை கோவில் பாப்பாகுடி சத்யாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குளம் போலத் தேங்கியுள்ள மழைநீா்.

மதுரை கோவில் பாப்பாகுடி சத்யாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குளம் போலத் தேங்கியுள்ள மழைநீா்.

    மதுரை கோவில் பாப்பாகுடி சத்யாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குளம் போலத் தேங்கியுள்ள மழைநீா்.

மதுரை கோவில் பாப்பாகுடி சத்யாநகரில் குடியிருப்புப் பகுதிகளில் குளம் போலத் தேங்கியுள்ள மழைநீா்.

    மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.