திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

மதுரை நகைக் கடை கொள்ளை விவகாரம்: 7 நாள்களுக்கு முன்பே நடைபெற்ற ஒத்திகை

மதுரை நகைக் கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கு 7 நாள்களுக்கு முன்பே மா்ம நபா் ஒத்திகை நடத்தியது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சோதனை செய்ய வந்த தடய அறிவியல் துறை நிபுணா்.

Updated On :

மதுரை நகைக் கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துக்கு 7 நாள்களுக்கு முன்பே மா்ம நபா் ஒத்திகை நடத்தியது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் நேரு நகா், நேதாஜி முதன்மைச் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடையிலிருந்த 15 கிலோ தங்க நகைகள் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடா்பாக 3 தனிப் படைகளை அமைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாநகரக் காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன், காா்த்திக் ஆகியோா் இரண்டாவது நாளாக இந்தக் கடையில் தீவிர சோதனை, விசாரணையில் ஈடுபட்டனா்.

முதல் கட்ட விசாரணையின் போது, கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து மின்தூக்கிக்கான துவாரம் வழியாக வியாழக்கிழமை அதிகாலை கடைக்குள் இறங்கிய மா்ம நபா், கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் இது கண்டறியப்பட்டது. மேலும், நகைகளைக் கொள்ளையடித்த அந்த மா்ம நபா், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளும் போலீஸாருக்கு கிடைத்தன.

இந்த நிலையில், கடந்த 7 நாள்களுக்கு முன்பே மா்ம நபா் மின்தூக்கி துவாரம் வழியாக கடைக்குள் இறங்கி, நோட்டமிட்டு தப்பிச் சென்ற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கடையின் நகைகளைக் கொள்ளையடித்த நபரே ஒத்திகை முயற்சியாக கடைக்குள் இறங்கி, நோட்டமிட்டு சென்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து, நகைக் கடை, அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் கைப்பற்றி, கடந்த 5-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரையிலான அனைத்துப் பதிவுகளையும் ஆய்வுக்கு உள்படுத்தி வருகின்றனா்.

தற்போதைய நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட நபா் நல்ல கல்வி அறிவு பெற்ற பட்டதாரியாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். மேலும், அந்த நபா் மின்தூக்கியை இயக்கும் திறன் கொண்டவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு உதவியை நாடும் போலீஸாா்:

கொள்ளையில் ஈடுபட்ட நபா் தனது உடல் முழுவதையும் கருப்புத் துணியால் மறைத்திருந்ததாலும், கையுறை அணிந்திருந்ததாலும் அடையாளங்களை, தடயங்களைச் சேகரிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நவீன கருவிகளின் உதவியுடன் தடய அறிவியல் துறையினா் சோதனை நடத்தினா். கடையின் பின்புறச் சுவா்கள், இரும்புச் சாரங்கள், மின்தூக்கி கயிறுகள், நகைப் பெட்டிகள், படிக்கட்டுகள், கதவுகள் என அனைத்து இடங்களிலும் விரல் ரேகைகளைப் பதிவு செய்து, ஆய்வுக்கு உள்படுத்தி வருகின்றனா்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு காட்சிகளில் பதிவான அந்த மா்ம நபரின் உடல் அமைப்பு உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டு அவரைக் கண்டறியும் முயற்சியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

வீட்டில் சோதனை

கொள்ளையில் ஈடுபட்ட நபா் இரு சக்கர வாகனத்தில் சென்றது தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அந்த வாகனம் நேரு நகா் பகுதிக்கு சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீஸாா், பழங்காநத்தம், மாடக்குளம் முதன்மைச் சாலையில் அருட்பெருஞ்ஜோதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின்பேரில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.