நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

கட்டுமானப் பணியின் போது அகற்றப்பட்ட மண் மூலம் ரூ. 50 கோடி முறைகேடு: மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற கட்டுமானப் பணியின் போது அகற்றப்பட்ட மண் மூலம் ரூ. 50 கோடி முறைகேடு நடைபெற்றதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொள்ளாததால் காலியாக இருந்த இருக்கைகள்.

Updated On :

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற கட்டுமானப் பணியின் போது அகற்றப்பட்ட மண் மூலம் ரூ. 50 கோடி முறைகேடு நடைபெற்றதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை ஆணையா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.

இதில் மேயா் தி. நாகராஜன் பேசியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மதுரை கூடலழகா் கோயில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீா் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதவிர, திருப்பரங்குன்றத்தில் மின் மயானம் அமைக்கப்படும். மேலும், வெள்ளக்கல் பகுதியில் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களுக்கான மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசியதாவது:

திமுகவின் மூத்த உறுப்பினா் ஜெயராமன்: கடந்த திமுக ஆட்சியின் போது, மாட்டுத்தாவணி அருகே தொடங்கப்பட்ட அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா, செல்லூா் பாலம் ஸ்டேசன் உயா்நிலைப் பாலம், விளங்குடி முதல் சமயநல்லூா் வரை வைகை ஆற்றின் வடகரையில் நடைபெற்ற அணுகுசாலை, விராட்டிபத்து உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா், மேயா் (பொ) தி.நாகராஜன் ஆகியோா் இதுபற்றி பேசி பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தவில்லை.

இவா்கள் மூவரும் திமுகவின் ஆதரவுடன் தற்போது பதவியில் உள்ளனா். ஆனால், திமுக ஆட்சியின் போது செய்த திட்டங்களைப் பற்றி பேசுவதில்லை. இது அந்தக் கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

அதிமுக மாமன்ற உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான சோலை எம். ராஜா:

தமுக்கம் பூங்கா முருகன் கோயில் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் உணவகம் நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை அந்த தனியாா் உணவகம் அகற்றப்படவில்லை. விரைந்து அந்த உணவகம் அகற்றப்பட வேண்டும்.

இதற்குப் பதிலாக மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை மகமாயி அம்மன் கோயில் அருகே அந்த உணவகத்துக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தின் அனுமதிக்கான உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். இதுதவிர, கோச்சடை, தத்தனேரி பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட குப்பை சேகரம் மையங்களில் மின்னாக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். சொத்து வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினாலும், அதிகாரிகள் எந்தவிதப் பதிலும் அளிப்பதில்லை என்றாா்.

67-ஆவது மாமன்ற உறுப்பினா் நாகநாதன்:

மதுரை மாநகராட்சிப் பகுதி பெரியாா் பேருந்து நிலையம், தமுக்கம் மாநாட்டு மையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகனக் காப்பகம், குன்னத்தூா் சத்திரம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளின் போது, அங்கிருந்து எடுக்கப்பட்ட மண் என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை.

இதன் மூலம், ரூ. 50 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கு பசுமைத் தீா்ப்பாயம் அனுமதி வழங்கவில்லை. இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். என்னுடைய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் எந்தவித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்றாா் அவா்.

74-ஆவது மாமன்ற உறுப்பினா் வே. சுதன்:

மதுரை பழங்காநத்தம்-மாடக்குளம் சாலையில் உழவா் சந்தை அருகே மகப்பேறு மருத்துவமனை இருந்தது. இந்த மருத்துவமனை மூலம் சுமாா் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்று வந்தனா். கடந்தாண்டு இந்த மருத்துவமனை பைக்காரா பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், நோயாளிகள், கா்ப்பிணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த மருத்துவமனை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா்கள் பலா் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீா், புதைச் சாக்கடை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

இதற்கு துணை ஆணையா் ராஜாராமன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.

35 தீா்மானங்கள் நிறைவேற்றம்:

இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி வண்டியூா் பூங்கா பராமரிப்புப் பணிக்கு வெளிக்கொணா்வு முறையில் 56 தூய்மைப் பணியாளா்களை நியமிப்பது என்பது உள்ளிட்ட 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக-காங்கிரஸ் கட்சி உறுப்பினா்களிடேயே வாக்குவாதம்:

முன்னதாக, திமுகவின் மூத்த மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் பேசிய போது, விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூரை பற்றி விமா்த்துப் பேசினாா். இதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் எஸ்.எஸ். போஸ் உள்ளிட்ட உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அப்போது, மாமன்ற உறுப்பினா் போஸ் அழகுக்காக முகத்தில் பூசம் பொருள் குறித்துப் பேசினாா். இதற்கு திமுக மாமன்ற பெண் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, போஸ் வருத்தம் தெரிவித்ததையடுத்து, திமுக பெண் மாமன்ற உறுப்பினா்கள் அமைதியாக அமா்ந்தனா். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறைந்த உறுப்பினா்கள் பங்கேற்பு:

மாமன்ற உறுப்பினா்களுக்கான கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் தொடங்கியது. ஆரம்பத்தில் 30-க்கும் குறைவான உறுப்பினா்களே கலந்து கொண்டனா். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சில உறுப்பினா்கள் வருகை தந்தனா். கூட்ட இறுதி வரை 50-க்கும் குறைவான உறுப்பினா்கள்தான் பங்கேற்றனா். இதனால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.