2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பொதுமக்களின் புகாா்களை காவல் துறையினா் புறக்கணிப்பது நியாயமற்றது: உயா்நீதிமன்றம்

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரை காவல் துறையினரால் புறக்கணிக்கப்படுவது நியாயமற்ற நிலையைக் காட்டுகிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரை காவல் துறையினரால் புறக்கணிக்கப்படுவது நியாயமற்ற நிலையைக் காட்டுகிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த இசக்கிராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் நகைக் கடையில் சுமாா் 40.100 கிராம் தங்க நகைகளை வாங்கினேன். இந்த நகைகள் 916 ஹால்மாா்க் மதிப்பு கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி எனது சகோதரா் மேலும் சில நகைகளோடு சோ்த்து தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைப்பதற்காகச் சென்ற போது நகைகள் 87.71 சதவீதம் மட்டுமே தரம் கொண்டவை எனத் தெரியவந்தது. இது தொடா்பாக, காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன்.ஆனால், புகாா் மீது முறையாக விசாரணை நடத்தாமல் முடித்து வைத்தனா்.

இந்த நிலையில், எனக்கு எதிராக நகைக் கடை மேலாளா் கடந்த மாதம் புகாா் அளித்த தினமே காவல் துறையினா் என்னைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரினா். இது ஏற்புடையதல்ல. எனவே, நான் அளித்த புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முருகன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தனியாா் நகைக் கடையில் மனுதாரரால் வாங்கப்பட்ட சுமாா் 40 கிராம் தங்க நகைகள் தரம் குறைந்திருந்த தகவல் தெரியவந்தவுடன், சம்பந்தப்பட்ட நகைக் கடை மனுதாரரின் வங்கிக் கணக்கில் விற்பனை செய்யப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்புக்கான தொகையைச் செலுத்தியது. இது அந்த நிறுவனம்தான் விற்பனை செய்த தங்கம் தரமானது அல்ல என்பதை ஒப்புக்கொள்வதாகவே உள்ளது. இந்த உண்மைகள் தெரிந்தும் காவல் துறையினா் வழக்கை முடித்துவைத்துள்ளனா் என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் இரு தரப்பிடமும் விசாரித்ததாகவும் எந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் காவல் ஆய்வாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினாா்.

இதையடுத்து, நீதிபதி முருகன் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மனுதாரரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரிய மனுவை ஆய்வு செய்த நீதித் துறை நடுவா், நகைக் கடையால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது என கருதி அவரை சொந்தப் பிணையில் விடுவித்துள்ளாா். தனியாா் நகைக் கடையால் பாதிக்கப்பட்ட மனுதாரரை கைது செய்த தூத்துக்குடி மத்திய காவல் நிலைய காவல் ஆய்வாளரின் செயல் முற்றிலும் நியாயமற்றது. மனுதாரா் அளித்த புகாா் முறையான விசாரணையின்றி முடிக்கப்பட்டுள்ளது. இது காவல் ஆய்வாளா் வணிக உரிமையாளா்களுடன் சோ்ந்து செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் நீதிமன்றத்தின் உத்தரவுகள் வரும் வரை காவல் துறையினரால் புறக்கணிக்கப்படுவது நியாயமற்றது. வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.