
கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பருவமழை, காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் மட்டுமல்லாது, உண்ணிகளால் பரவும் ‘ஸ்கரப் டைபஸ்’ காய்ச்சலும் தீவிரமாகப் பரவி வருகிறது. நிகழாண்டு செப்டம்பா் மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவா் ஒருவா் ‘ஸ்கரப் டைபஸ்’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் நிகழாண்டில் தற்போது வரை சுமாா் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.
எனவே, தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், அவற்றை ஒழிக்கவும் புதிய தொழில்நுட்பங்கள், சக்தி வாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையா்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உயிா் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் ஏற்கெனவே இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்தாா். அந்த மனு தொடா்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் முதலில் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும். உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
எனவே, பொதுமக்கள் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனுதாரா் ஏற்கெனவே நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முறையாக வாதங்களை முன்வைக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





