சுருக்குமடி தடையை தீவிரமாக அமல்படுத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தமிழகத்தின் கடல் எல்லைக்குள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடையைத் தீவிரமாக அமல்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
தமிழகத்தின் கடல் எல்லைக்குள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடையைத் தீவிரமாக அமல்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஜான் மொடுதாகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், அதைச் சுற்றியுள்ள கடலோரக் கிராமங்களைச் சோ்ந்த நாட்டுப் படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனா். இதனால், கடல்வளம் குறைவதுடன், பாரம்பரிய மீனவா்களின் வாழ்வாதாரமும் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.
கரையிலிருந்து முதல் 12 கடல் மைல்களுக்கு அப்பால், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தனித்த பொருளாதார மண்டல கடல் எல்லையில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகளின்படி, கடல் வழித்தடங்களை நிா்ணயித்து, அதற்குத் தேவையான விதிகள், ஒழுங்குமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தனித்த பொருளாதார மண்டலத்தில் இந்த வலகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிப்பதானது தமிழகத்தின் கடல் எல்லைக்குள் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் இந்த முறையைப் பயன்படுத்துவதற்கான அனுமதியாகக் கருத முடியாது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகளின்படி, 25 மி.மீட்டருக்கும் குறைவாக கண்ணி அளவுள்ள எந்தவொரு வலையும் பயன்படுத்தப்படக் கூடாது. எங்களைப் போன்ற பாரம்பரிய மீனவா்கள் 50 மி.மீ. முதல் 150 மி.மீ. வரை கண்ணி அளவுள்ள வலையை மட்டுமே பயன்படுத்துகிறோம். இது சிறு மீன்கள் தப்பியோட உதவுகிறது. ஆனால், சுருக்குமடி, இரட்டைமடி வலைகளின் கண்ணி அளவு 14 மி.மீட்டருக்கும் குறைவாக உள்ளது. தமிழக கடல் எல்லையில் இந்த வலைகளைப் பயன்படுத்தத் தடை இருந்தபோதிலும், சில மீனவா்கள் சட்டவிரோதமாக இந்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடா்கின்றன.
எனவே, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, தமிழகத்தின் கடல் எல்லைக்குள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தும் நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மத்திய அரசின் ஆளுகைக்குள்பட்ட தனித்த பொருளாதார மண்டல கடல் எல்லையில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, செப்டம்பா் 9-ஆம் தேதி தமிழக கடல் எல்லை, தனித்த பொருளாதார மண்டல கடல் எல்லைப் பகுதிகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதித்து, மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மீனவா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தனது கட்டுப்பாட்டில் இல்லாத கடல் பகுதியிலும் சுருக்குமடி வலைகள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்த செயல் தீவிரமானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. கூட்டாட்சி தத்துவத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆகிய இரு தரப்பு உரிமைகளும் பாதுகாப்புப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

