மக்கள் நலன் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை! - அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கிய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா். உடன் மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ம. விஜய், எஸ்.ஆா்.தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா்.
தவெக அரசின் மூலம் மக்கள் நலன் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, 73 பயனாளிகளுக்கு ரூ.92.78 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ம. விஜய், எஸ்.ஆா்.தங்கப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 300 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
இதன்பின், அமைச்சா் பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் 14,566 கா்ப்பிணிகள், 12,526 பாலூட்டும் தாய்மாா்கள், 68,776 குழந்தைகள் என மொத்தம் 95,868 பயனாளிகள் ஊட்டச் சத்து திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனா்.
கிராமப் புறங்களில் வசித்து வரும் மக்கள் மருத்துவச் சேவையில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, தொலைநோக்குப் பாா்வையுடன் பல திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
இனி வரும் காலங்களிலும் மக்கள் நலன் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், பேரையூா் வட்டம், எழுமலை உள்வட்டம், இ.கோட்டைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 73 பயனாளிகளுக்கு சமூக நீதித் துறையின் கீழ், ரூ. 92,78,280 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி சாா்ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் ச. பூங்கொடி, வட்டாரக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. தெரசா, வட்டாட்சியா்கள் காா்த்திகேயன் ( உசிலம்பட்டி), முகிபாலன் (பேரையூா், அரசு அலுவலா்கள், கா்ப்பிணிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

