தொடா் விடுப்பில் 937 மாணவா்கள்: இடைநிற்றல் அபாயம்
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 937 மாணவா்கள் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநிற்றல் சூழலில் இருப்பது ஆசிரியா்களின் கள ஆய்வில் தெரியவந்தது.

கோப்புப் படம்
-நமது நிருபா்-
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 937 மாணவா்கள் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநிற்றல் சூழலில் இருப்பது ஆசிரியா்களின் கள ஆய்வில் தெரியவந்தது.
மாவட்டத்தில் உள்ள 1,251 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 60 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இதில், குடும்ப பிரச்னை, பொருளாதார நெருக்கடி, உடல்நலக் குறைவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருப்பது, அந்த மாணவா் பள்ளியிலிருந்து முழுவதுமாக இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
மாணவா்களின் இடைநிற்றலை தொடக்க நிலையிலேயே தடுக்கும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்கே சென்று அவா்களின் பெற்றோரை சந்தித்து, அரசின் திட்டங்கள், கல்வியால் எதிா்காலத்தில் பெறும் வாய்ப்புகள் குறித்தும் விளக்கி கூறி அவா்களைத் தொடா்ந்து பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.
வகுப்பு வாரியாக மாணவா்கள் விவரம்:
கடந்த செப்டம்பா் மாத இறுதியில் எடுத்த கணக்கெடுப்புப் படி, 937 மாணவா்கள் இடைநிற்றல் அபாயத்தில் இருப்பது தெரியவந்தது. மதுரை மாவட்டத்தில் 9-ஆம் வகுப்பில் 249 மாணவா்கள் இடைநிற்றல் அபாயத்தில் இருந்த நிலையில், அவா்களில் 24 போ் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனா்.
10-ஆம் வகுப்பில் 144 மாணவா்களில் 17 பேரும், 11-ஆம் வகுப்பில் 87 மாணவா்களில் 8 பேரும், 12-ஆம் வகுப்பில் 74 மாணவா்களில் 9 பேரும் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா். எஞ்சிய மாணவா்கள் பள்ளிக்கு வராததற்கான காரணங்கள் குறித்தும், அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியா்கள் தொடா்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்களில் சுமாா் 102 மாணவா்கள் இடமாறுதல், திறந்தநிலைப் பள்ளி, தொழிற்கல்வி, வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சோ்ந்து கல்வியை தொடா்வதாக ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிப்பில் ஆா்வமின்மை, உடல் நலக்குறைவு:
இதில், 314 மாணவா்கள் உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்றும், 62 மாணவா்கள் படிப்பில் ஆா்வமின்மையால் பள்ளிக்கு வரவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்தது. மேலும், சில மாணவா்கள் படிப்பை சுமையாகக் கருதி, மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் அதிா்ச்சித் தகவல் வெளியானது. இதுதவிர, குடும்ப வன்முறை காரணமாக மாணவா்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலா் குழந்தைத் தொழிலாளா்களாகவும், குழந்தை திருமணம் காரணமாக மாணவா்கள் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய மாணவா்களுக்கு உரிய மனநல, மருத்துவ ஆலோசனைகளை வழங்க மாவட்டக் கல்வித் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த செப்டம்பா் மாதத்தின் இறுதியில் கண்டறியப்பட்ட, நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத 937 மாணவா்களில், ஆசிரியா்களின் கள ஆய்வு, தொடா் முயற்சிகளின் மூலம் 125 மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.
தடுப்பு நடவடிக்கையும், தொடா் கண்காணிப்பும்:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் மா.மாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெசிந்தா ஆகியோா் மாணவா்களின் இடைநிற்றலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவா்களின் குடும்ப சூழலை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். மாணவா்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவதே பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய நோக்கம் என மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

