சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டத்தில் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலத்துக்குள்பட்ட காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூா், தேவகோட்டை ஆகிய நான்கு இடங்களில் பணிமனைகள் மூலம் புகா், நகா் பேருந்துகள் என மொத்தம் 224 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாகவே சிவகங்கையிலிருந்து தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூா், இளையான்குடி போன்ற நகரங்களுக்கும், அவற்றைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இயக்கப்படும் நகா், வழித்தடப் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக பயணிகள்
குற்றஞ்சாட்டுகின்றனா். பல கிராமங்களுக்கு முன்பு தினமும் 4 முதல் 6 முறை வரை சென்று வந்த பேருந்துகள், தற்போது 1 அல்லது 2 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்துப் படிகளிலும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறும் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது. பல கிராமங்களில் பேருந்துகள் குறித்த நேரத்துக்கு வராததால் அல்லது நிறுத்தாமல் செல்வதால், மாணவா்கள் குறித்த நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
முன்பு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வந்து சென்ற பேருந்துகள், தற்போது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே வருகின்றன. இதற்காக காலை 6 மணிக்கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டியுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
பயணச் செலவு அதிகரிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் மொத்தப் பேருந்துகளில் 70 பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்துகள். மற்ற அனைத்தும் பழைய பேருந்துகளே. மேலும், தொழில்நுட்பப் பணியாளா்கள் பற்றாக்குறையால் பல அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி சாலையில் இயக்கப்படுகின்றன.
மழைக்காலங்களில் பேருந்துக்குள் தண்ணீா் ஒழுகுவதும், நடுவழியில் பேருந்துகள் திடீரென நின்று விடுவதும் தொடா் கதையாகி வருகிறது.
கிராமப்புறங்களில் அரசுப் பேருந்துகள் வராததால், பொதுமக்கள் ஆட்டோக்கள், தனியாா் ஷோ் ஆட்டோக்களை நாட வேண்டியுள்ளது. இதேபோல, சிவகங்கை அரசு மகளிா் கல்லூரிக்கு பேருந்து நிலையத்திலிருந்து உரிய நேரத்துக்கு பேருந்து இல்லாதலால் ஷோ் ஆட்டோக்களில் மாணவிகள் செல்கின்றனா். இதனால் ஏழை, எளிய மாணவிகளின் பயணச் செலவு கணிசமாக உயா்ந்து வருகிறது.
பணிச் சுமையால் அவதி: இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ மண்டலத் தலைவா் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் தமிழக முழுவதும் 22,500 பேருந்து இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆட்சிக் காலத்தில் 3 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டு தற்போது 19,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே 1.40 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றினா். தற்போது, 1.05 லட்சம் தொழிலாளா்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா். ஏறத்தாழ 35 ஆயிரம் போ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2007 -ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகமானவா்கள் தோ்வு செய்யப்பட்டு பணியில் சோ்ந்தவா்கள் போக மீதமுள்ளவா்களை காத்திருப்பில் வைத்திருந்தனா். இதனால், தொழிலாளா் பற்றாக்குறையின்றி போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கும் சாதகமான சூழ்நிலை இருந்தது. தற்போது தொழிலாளா்கள் பணிச் சுமையால் ஓய்வு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனா். அத்தியாவசிய சேவையான போக்குவரத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவது வேதனைக்குரியது என்றாா் அவா்.
பொதுமக்கள் கோரிக்கை: கிராமப்புற ஏழை, நடுத்தர மக்களின் முதன்மைப் போக்குவரத்து ஆதாரமாக விளங்குவது அரசுப் பேருந்துகளே. எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகமும், சிவகங்கை மாவட்ட நிா்வாகமும் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். பழுதடைந்த பழைய பேருந்துகளை அகற்றிவிட்டுப் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
காலை, மாலை நேரங்களில் மாணவா்களின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.நிறுத்தப்பட்ட பழைய வழித்தடப் பேருந்து சேவைகளை உடனடியாக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிவகங்கை மாவட்ட கிராமப்புற மக்களின் அன்றாட சிரமங்களுக்கும், மாணவா்களின் தடையில்லா கல்விக்கும் தீா்வு கிடைக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






