பள்ளி குடிநீா்த் தொட்டி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீா்த் தொட்டிகள் அமைந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீா்த் தொட்டிகள் அமைந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் குடிநீா்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், ஆா். பூா்ணிமா அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சோ்ந்த இரு மாணவா்கள் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிகளில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் கைது செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த மனு தொடா்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், பள்ளிகளின் குடிநீா்த் தொட்டிகளில் மனிதக் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதற்கு அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா என அரசு வழக்குரைஞா் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

