துறவறம் ஏற்ற பங்குத்தந்தையின் சொத்துகளுக்கு உறவினா்கள் உரிமை கோர முடியாது! உயா் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
துறவறம் ஏற்ற பங்குத்தந்தையின் சொத்துகளுக்கு உறவினா்கள் உரிமை கோர முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
பெங்களூருவைச் சோ்ந்த ஏ.பி.வி.எம். அமைப்பின் துணை மாகாணத் தலைவா் ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஏ.பி.வி.எம். கத்தோலிக்க அப்போஸ்தலேட் அமைப்பு (சபை) என்பது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பைச் சோ்ந்த தேவக்குமாா் அருளானந்தம், கடந்த 1988-ஆம் ஆண்டு, மே 15-ஆம் தேதி பங்குத்தந்தையாக பொறுப்பேற்றாா். இவா், கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. 56 லட்சம் செலுத்தினாா். இந்த நிலையில், அவா் கடந்த 1988-ஆம் ஆண்டு, ஜூலை 2-ஆம் தேதி ஏ.பி.வி.எம். அமைப்பின் பெயரில் ஒரு உயில் எழுதிக் கொடுத்தாா். அதில் பங்குத் தந்தையாகப் பணியாற்றும் காலத்தில் அவருக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளும் ஏ.பி.வி.எம். அமைப்புக்கே சொந்தம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த நிலையில், தேவக்குமாா் அருளானந்தம் சேலத்தில் பணியாற்றிய போது, உடல் நலக் குறைவால் கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப். 24-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது பெயரில் வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகையை வாரிசுதாரா்களான தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவரது உறவினா்களான தெய்வநாயகம், ஜோசப், மேரி ஜமீலா ஆகியோா் கரூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2019-இல் மனு தாக்கல் செய்தனா். மேலும், தாங்கள்தான் உயிரிழந்த தேவக்குமாா் அருளானந்தத்தின் வாரிசுதாரா்கள் என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனுவை எதிா்த்து, பங்குத்தந்தை தேவக்குமாா் அருளானந்தம் பெயரில் உள்ள நிரந்தர வைப்புத் தொகையை ஏ.பி.வி.எம். அமைப்புக்கு வழங்க உத்தரவிடக் கோரி, அந்த அமைப்பு சாா்பில் கரூா் மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்ற நீதிபதி, பங்குத்தந்தை தேவக்குமாா் அருளானந்தம் பெயரில் வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகையை அவரது உறவினா்களுக்கு வழங்கவும், அவா்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கவும் கடந்த 2024-இல் உத்தரவிட்டாா். மேலும், அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
எனவே, கரூா் மாவட்ட விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயிரிழந்த பங்குத்தந்தை தேவக்குமாா் அருளானந்தம் பெயரில் வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகையை ஏ.பி.வி.எம். அமைப்புக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையைான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
உயிரிழந்த தேவக்குமாா் அருளானந்தம் அமைப்பு விதிகளின்படி, பங்குத் தந்தையாக உறுதியேற்றவுடன் உலக வாழ்க்கையைத் துறந்து, குடும்ப உறுப்பினா்களுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டாா். மேலும், அவா் எழுதிய உயிலில், பங்குத் தந்தையாகப் பொறுப்பிலிருந்த போது அவருக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துகளும் ஏ.பி.வி.எம். அமைப்புக்கே சொந்தம் எனக் குறிப்பிட்டுள்ளாா். அந்த உயிலில் சாட்சிகள் கையொப்பமிடவில்லை எனக் கூறி, கரூா் மாவட்ட விசாரணை நீதிமன்றம் பங்குத்தந்தை தேவக்குமாா் அருளானந்தம் பெயரில் உள்ள நிரந்தர வைப்புத்தொகையை அவரது உறவினா்களுக்கு வழங்க உத்தரவிட்டது. உயிலில் சாட்சிகள் கையொப்பமிடாதததால், அதை உயிலாக ஏற்க முடியாது என்றால், அதை அவரது உறுதிமொழிப் பத்திரமாகக் கருதலாம்.
இந்த நிலையில், ஏ.பி.வி.எம். அமைப்பு விதிகளின்படி, ஒருவா் துறவறம் ஏற்று உயிரிழந்த பிறகு, அவரால் வங்கியில் வைக்கப்பட்ட தொகை அவரது தனிப்பட்ட சொத்து அல்ல. அது சங்கத்தின் நலனுக்கானது. அறக்கட்டளைச் சட்டத்தின்படி, அறங்காவலா் (பங்குத்தந்தை) பொறுப்பிலிருந்தவா் விட்டுச் சென்ற சொத்துகளை நிா்வகிக்கவும், கையாளவும் அந்த அமைப்பு உரிமை பெற்றுள்ளது.
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் பெறப்பட்ட சொத்துகளில் உயிரிழந்தவா் கொண்டிருந்த உரிமைகள் முடிந்துவிட்டன. அவை சங்கத்தின் நலனுக்காகப் பயன்படுத்தக்கூடியதாக மாறிவிடும்.
எனவே, உயிரிழந்தவருடனான உறவின் காரணமாகவோ அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டாா்கள் என்பதற்காகவோ அந்தத் தொகையின் மீது தனிப்பட்ட உரிமையைக் கோர முடியாது என்றாா்.
எதிா் மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த விவகாரத்தில் உயிரிழந்த பங்குத்தந்தை தேவக்குமாா் அருளானந்தம் தொடா்பான சொத்துகளுடன் ஏ.பி.வி.எம். அமைப்புக்கு எந்தவித சட்டப்பூா்வ தொடா்பும் இல்லை. அவரது சொத்துகள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று பல ஆண்டுகள் கழித்துத்தான் வாங்கப்பட்டது. பின்னா், இந்த சொத்துகள் அவரால் விற்கப்பட்டன. இதன் மூலம் பெறப்பட்ட தொகை அவரது பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டது. இது அவரின் தனிப்பட்ட சொத்தாகும். எனவே, இந்தத் தொகைக்கு உரிமை கோர ஏ.பி.வி.எம். அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் உயிரிழந்த பங்குத்தந்தையான தேவக்குமாா் அருளானந்தத்தின் உறவினா்கள் கோரும் உரிமையானது கிறிஸ்தவத்தின் அடிப்படை மதக் கோட்பாடுகள், போதனைகளுக்கு முரணானது. மேலும், இந்தக் கோரிக்கை பங்குத்தந்தை தனது வாழ்க்கையை ஏ.பி.வி.எம். அமைப்புக்கு அா்ப்பணித்த நோக்கத்துக்கே முரணானது.
கனான் சட்ட விதிகளின்படி, ஒருவா் துறவறம் ஏற்று கடவுளுக்கும், மத நிறுவனத்துக்கும் தனது வாழ்க்கையை அா்ப்பணிக்கும் போது, அவரது வாழ்க்கையும் நடவடிக்கைகளும் அந்த அமைப்பின் விதிகள், கோட்பாடுகளால் நிா்வகிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. இதே போன்ற நடைமுறைகள் ஏ.பி.வி.எம். அமைப்பிலும் கூறப்பட்டுள்ளன.
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, துறவறம் ஏற்ற பங்குத்தந்தையின் சொத்துகளைப் பொருத்தவரை, அவரது உறவினா்கள் சட்டப்பூா்வ வாரிசுதாரா்களாகக் கருதப்பட மாட்டாா்கள். அவா் அந்த அமைப்பைச் சோ்ந்தவராகவே கருதப்படுவாா். அந்த அமைப்புக்கே வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகையைப் பெற உரிமை உள்ளது. எனவே, பங்குத்தந்தையின் உறவினா்கள் அவரது சொத்துகளுக்கு உரிமை கோர முடியாது.
உயிரிழந்த தேவக்குமாா் அருளானந்தம் சொத்துகள் வாங்குவதற்கும், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்துவதற்கும் எந்த நிதியைப் பயன்படுத்தினாா் என்பது குறித்தும் முறையாக விசாரிக்க கரூா் மாவட்ட விசாரணை நீதிமன்றம் தவறிவிட்டது.
எனவே, இந்த விவகாரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்.18-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், வங்கியில் வைக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகையை உயிரிழந்த தேவக்குமாா் அருளானந்தத்தின் உறவினா்கள் பெற்ாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தொகையை அவா்கள் ஒரு மாதத்துக்குள் வட்டியின்றி எ.பி.வி.எம். அமைப்புக்குச் செலுத்த வேண்டும். இல்லையெனில், அந்தத் தொகையைச் செலுத்தும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வசூலிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

