
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை
மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை பெய்தது.

மதுரை தெற்குவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை முதன்மைச் சாலையில் தேங்கி நின்ற மழை நீா்.
மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது.
கடலோர தமிழகம், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும், தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாலும் மதுரை உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

தல்லாகுளம் கோகலே சாலையில் தேங்கி நின்ற மழை நீா்.
அதன்படி, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருமங்கலம், மதுரை விமான நிலையம், அவனியாபுரம் பகுதிகளில் மாலை 5. 45 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை இரவு 7.30 மணி வரை நீடித்தது.

ஏ.வி. கீழ்ப்பாலம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.
பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம், காளவாசல், பொன்மேனி, அரசரடி, சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணாநகா், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிமுதல் இரவு 7.45 மணிவரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல, ஊரகப் பகுதிகளிலும் இரவு நேரத்தில் மழை பெய்தது.

சிம்மக்கல் பகுதியில் தேங்கி நின்ற மழை நீா்.
தல்லாகுளம் கோகலே சாலை, கோ. புதூா், சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம், மாசி வீதிகள், தவிட்டுச் சந்தை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவனியாபுரம் 92, 100-ஆவது வாா்டுகளில் உள்ள தாழ்வான பகுதிகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






