
போக்சோ வழக்கில் மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
போக்சோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை விடுதலை செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்
போக்சோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை விடுதலை செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன். அந்தப் பகுதியிலுள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கில் சந்திரனைக் கைது செய்தனா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரனுக்கு மரண தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் கடந்த 2024-இல் தீா்ப்பளித்தாா்.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து சந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
முன்விரோதம் காரணமாகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், பெற்றோா்களின் வாக்கு மூலம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. எனவே, மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் வீடு கதவு, சாளரங்கள் இல்லாத சிறிய வீடு என்றும், சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதி என்றும் சாட்சிகள் கூறினா். பகல் நேரத்தில் 5 சிறுமிகள் அலறியதாகக் கூறப்படும் நிலையில், அக்கம் பக்கத்தினா் யாரும் இதைக் கவனிக்கவில்லை என்பதும், சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை என்பதும் அரசுத் தரப்பு வாதத்தைப் பலவீனப்படுத்துகிறது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், புகாா் அளித்தவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக விசாரணையில் தெரியவருகிறது.
மருத்துவப் பரிசோதனையில் சிறுமிகளின் உடலில் எந்தவித வெளிப்புற அல்லது உள்புறக் காயங்கள் இல்லை என மருத்துவா் அறிக்கை அளித்திருக்கிறாா். போதிய ஆதாரங்கள் இல்லாமல் குழந்தைகளின் சாட்சியங்களை மட்டும் வைத்து இத்தகைய கடுமையான தண்டனையை வழங்க முடியாது.
இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, இந்த வழக்கில் சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும், குற்றஞ்சட்டப்பட்ட சந்திரனை வேறு வழக்கு தொடா்பாக காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லையெனில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





