
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்: தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேராசிரியை மனு; விசாரணை ஒத்திவைப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் பேராசிரியை மனு குறித்து.....

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேராசிரியை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி (56), தன்னிடம் படித்த மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிா்மலாதேவியை கடந்த 2018, ஏப்.16-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் முருகன், முன்னாள் ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
நிா்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோா் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதையடுத்து, மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில், உதவிப் பேராசிரியை நிா்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.42 லட்சம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்றம உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை பெண்கள் சிறப்பு சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள நிா்மலா தேவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பில் 82 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஊடகப் பதிவு, ஒரு சிலரின் வாக்குமூலங்களை மட்டுமே அரசுத் தரப்பு ஏற்றது. இந்த வாக்குமூலங்கள் தொடா்பான எனது விளக்கம் முறையாகப் பரிசீலிக்கப்படவில்லை.
பிணையிலிருந்த காலத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். இந்த நிலையில், ஏற்கெனவே நான் தாக்கல் செய்த தண்டனை நிறுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சூழலில் நான் தெரிவித்துள்ள காரணங்களைப் பரிசீலித்து விருதுநகா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கவும், குற்றவியல் மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை பிணை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




