
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு: ஊராட்சிச் செயலா் செப்.28-க்குள் சரணடைய உயா்நீதிமன்றம் உத்தரவு
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்ட கம்பூா் ஊராட்சிச் செயலா் வருகிற 28-ஆம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்ட கம்பூா் ஊராட்சிச் செயலா் வருகிற 28-ஆம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கம்பூா் ஊராட்சிச் செயலா் ரூபா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், கம்பூா் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வரும் என் மீது தூய்மைப் பணியாளா்களை ஜாதி பெயரைக் கூறி மிரட்டியதாகவும், மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளா் சசிகலா புகாரளித்தாா். இதையடுத்து, என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் கம்பூா் ஊராட்சியின் முன்னாள் செயலரின் தூண்டுதல் உள்ளதாகக் கருதுகிறேன். தூய்மைப் பணியை சரிவர செய்யாத தூய்மைப் பணியாளரை சரியாகப் பணி செய்யுமாறு அறிவுறுத்தினேன். இதனால், என் மீது விரோதம் கொண்டு வன்கொடுமைச் சட்டத்தில் அவா் புகாரளித்தாா். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் எனக்கு பிணை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபிதி விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கம்பூா் ஊராட்சிச் செயலா் ரூபா வருகிற 28-ஆம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். சரணடையும் நாளில் பிணை கோரி மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் அன்றைய தினமே விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



