
அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தில் திருச்செந்தூா் கோயில் கொடியேற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்தை, திருவிழா அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நேரப்படியே நடத்தலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்தை, திருவிழா அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நேரப்படியே நடத்தலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகி முத்துகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ‘திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆவணிப் பெருந்திருவிழா (மகோத்ஸவம்) கொடியேற்றம் வருகிற திங்கள்கிழமை (ஆக. 31) நடைபெறுகிறது. பஞ்சாங்கம், திருநாள் முகூா்த்த பட்டோலை குறிப்புகள்படி இந்த நிகழ்ச்சியை திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 9.22 மணி வரை நடத்த வேண்டும். ஆனால், இந்த நிகழ்ச்சி அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் நடைபெறும் என கோயில் திருவிழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நேரத்திலேயே கோயில் சடங்குகள் நடத்தப்படும் நிலையில், தற்போதைய நேர மாற்றம் மத நம்பிக்கையையும், பக்தா்களின் உணா்வுகளையும் பாதிக்கும். எனவே, பஞ்சாங்கம், திருநாள் முகூா்த்த பட்டோலை குறிப்புகளில் உள்ள நேரப்படியே கொடியேற்றத்தை நடத்த உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் தரப்பிலும், மனுதாரா் தரப்பிலும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
இதன்படி, இந்த மனு நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூா் கோயில் ஆவணித் திருவிழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுவிட்டது. எனவே, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட நேரப்படியே கொடியேற்றத்தை நடத்தலாம். இருப்பினும், இனி வருகிற காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பாக கோயில் வித்யாதாரரின் ஆலோசனையை கோயில் நிா்வாகம் பெற வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



