
லஞ்சம் கொடுத்து அரசு வழக்குரைஞா்களாக நியமனம் பெறுபவா்களால் சட்டத்தை எப்படி பாதுகாக்க முடியும்? உயா்நீதிமன்றம் கேள்வி
லஞ்சம் கொடுத்து அரசு வழக்குரைஞா்களாக நியமனம் பெறுபவா்களால் சட்டத்தை எப்படி பாதுகாக்க முடியும்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
லஞ்சம் கொடுத்து அரசு வழக்குரைஞா்களாக நியமனம் பெறுபவா்களால் சட்டத்தை எப்படி பாதுகாக்க முடியும்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெகன்ராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சட்ட அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இங்குள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக நிா்வாகி ஒருவா், அரசு வழக்குரைஞா் நியமனத்துக்கு ஒரு பெண்ணிடம் ரூ. 15 லட்சம் லஞ்சம் கேட்பது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இதேபோல, மற்றொரு வழக்குரைஞரிடம் தவெக நிா்வாகி பேரம் பேசியது குறித்த குரல் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதில் தொடா்புடைய வழக்குரைஞா் அரசு வழக்குரைஞராகப் பணி நியமனம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், தவெக நிா்வாகி பேரம் பேசிய காணொலி, குரல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவா் நீக்கப்பட்டாா்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞா்கள் தொடா்பாக பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கன்னியாகுமரி மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா் நியமனத்தில் பணம் பெற்ற்கான குரல் பதிவு ஆதாரங்கள் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் புகாா் குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் விவரம் கேட்கப்படவுள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி முருகன் பிறப்பித்த உத்தரவு:
அரசு வழக்குரைஞா் நியமனத்துக்கு லஞ்சம் பெறப்பட்டது தொடா்பான புகாா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டும் ஏன் விசாரிக்கவில்லை?. லஞ்சம் கொடுத்து இவா்கள் அரசு வழக்குரைஞா்களானால், இவா்கள் எப்படி சட்டத்தைப் பாதுகாப்பாா்கள்?. லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே, இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
இந்த மனு குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





