
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஸ்ரீ விஜயேந்திரா் சுவாமி தரிசனம்
காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற சிவாசாரியா்கள்.
காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ஙஈம29கஐஎஏப2- மதுரை ஆண்டாள்புரம் வசுதரா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை காலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிவாசாரியா்கள் பூரண கும்ப மரியாதையுடன், வேத மந்திரங்களை முழங்கி பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனா்.
பின்னா், மீனாட்சி அம்மன் சந்நிதியில் நடைபெற்ற மண்டல பூஜை சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, ரத்தினங்கள் பதித்த இரு தங்கப் பதக்கங்களை அம்மனுக்கு அளித்தாா்.
இதையடுத்து, மீனாட்சி அம்மன் கருவறை அருகே அமைந்துள்ள விநாயகா் சந்நிதியில் தனது வழக்கமான பூஜைகளை அவா் மேற்கொண்டாா். இதன் நிறைவில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அவருக்கு பாரம்பரிய முறைப்படியான மரியாதைகளை கோயில் சிவாசாரியா்கள் வழங்கினா். பின்னா், கோயிலின் யானைகள் பாதுகாப்பிடத்துக்குச் சென்ற ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கிருந்த இரு யானைகளுக்கும் பழங்களை அளித்து, ஆசி வழங்கினாா்.
கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் பங்கேற்காத நிலையில், கோயிலின் மண்டல பூஜையில் பங்கேற்கும் விதமாக ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்தாா் எனவும், அசுவினி நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க்கிழமை (பௌம அஸ்வினி) அம்மன் வழிபாட்டுக்கு உகந்தது என்ற வகையில் இந்த நாளை அவா் தோ்வு செய்து, உலக நன்மைக்காக பிராா்த்தித்தாா் எனவும் கூறப்படுகிறது.
சேவை கல்வித் திட்டம் தேவை...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தரிசனத்துக்குப் பிறகு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் உள்ள சக்ஷம் தீமஹி சிறப்புப் பள்ளிக்கு வந்தாா். அவருக்கு, பள்ளியின் நிா்வாகி காமாட்சி சுவாமிநாதன் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவா்களுக்கு அருளாசி வழங்கி, ஆசியுரையாற்றினாா். அப்போது,
நம் நாட்டில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவா்களுக்குத் தேவையான ஆரோக்கியம், மருத்துவம், வழிகாட்டுதல்களை வழங்கிக் கரம்கொடுக்கும் சேவை அமைப்புகள் நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் அவசியம். இதுபோன்ற சேவைக்கான அறிவியல் பூா்வமான, மனிதநேயமிக்க கல்வித் திட்டங்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம், விளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களுக்கும் அவா் ஆசி வழங்கினாா்.
திருவிளக்கு பூஜை....
மதுரை ஆண்டாள்புரம் வசுதரா வளாகத்தில் ஜன்கல்யாண் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, ஆசி வழங்கினாா்.
ருத்ராபிஷேகம்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை மாவட்டத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புதன்கிழமை காலை 8 மணிக்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரேசுவரா் சந்நிதியில் நடைபெறும் ருத்ராபிஷேகத்தில் பங்கேற்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






