ராமநாதபுரம்,மார்ச் 24: ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனரும் வரலாற்று நூல் ஆசிரியருமான டாக்டர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கும் அதற்கு காரணமாக இருந்த தினமணி நாளிதழுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ்ச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கண்பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும் 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் டாக்டர் எஸ்.எம்.கமால். வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் வரலாற்று நூல்களை எழுதுவதற்காக தியாகம் செய்தவர்.
ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த கமால்(79) கடந்த 31.5.2007-ல் காலமானார். பல இலக்கிய வரலாற்று கருத்தரங்குகளை நடத்திய இவர், ôமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர்.
மதுரையில் 4-ம் தமிழ்ச் சங்கம் உள்பட 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். வரலாற்றுக் காப்பகங்கள் பலவற்றில் பல்வேறு நூல்களை வாசித்து, வாசித்தே கிளாக்கோமா என்ற கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தவர்.
தனது கடைசி 5 ஆண்டுகளில் இரு கண்களும் பார்வை இழந்த பிறகும்கூட 6 வரலாற்று நூல்களை பிறரின் உதவியுடன் எழுதியவர். இவர் சொல்லச்சொல்ல அதை ஒருவர் எழுத மற்றொருவர் சரிபார்த்த பிறகு புத்தகமாக்கியவர்.
அமெரிக்காவின் தக்சான் பல்கலைக்கழகம் இவருக்கு வரலாற்றுத்துறையில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. கடந்த 15.1.1991-ல் முதல்வர் கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் கலைவிழாவில் இவரைப் பாராட்டி விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார்.
எஸ்.எம்.கமால் எழுதிய நூல்கள்: ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள்(1984), முஸ்லிம்களும் தமிழகமும்(1990), மன்னர் பாஸ்கர சேதுபதி(1992), சீர்மிகு சிவகங்கை சீமை(1997), சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்(1998), திறமையின் திருஉருவம் ராஜா தினகர்(1999), செந்தமிழ் வள்ளல் சீதக்காதி(2000), மறவர் சீமை மாவீரன் நெப்போலியன்(2001), சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள்(2002), சேதுபதி மன்னர்களின் வரலாறு(2003), ராமர் செய்த கோயில் ராமேசுவரம்(2004), நபிகள் நாயகம் வழியில்(2005) போன்றவை இவர் எழுதிய நூல்கள்.
தமிழக அரசின் பரிசு பெற்ற இவரது நூல்கள்: விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்-ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி(1989), மாவீரர் மருதுபாண்டியர்கள் (1989), சேதுபதி மன்னர் செப்பேடுகள்(1994), சேதுபதியின் காதலி(1996).
அரசும், பல்வேறு அமைப்புகளும் வழங்கிய விருதுகள்: தமிழ்ப்பணிச் செம்மல் விருது, இமாம் சதக்கத்துல்லா விருது, சேதுநாட்டு வரலாற்று செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது, சேவா ரத்னா விருது, ராஜா தினகர் விருது, தமிழ் மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் தேவர் விருது.
இவருக்கு நூர்ஜஹான்(66) என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகிறது.
இவரது மகள் சர்மிளா ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த அப்போதைய மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஹசன்அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோரிடம்
கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.
அம்மனுவில் தந்தை எழுதிய நூல்களை மறுபதிப்பு செய்யுமாறும் அவற்றை நாட்டுடைமையாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரியிருந்தார்.
அவர்களும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போவதாக உறுதியளித்ததுடன் தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
இக்குடும்பத்தினரின் நிலை குறித்து தினமணியும் கடந்த 10.10.2008ல் வறுமையின் விளிம்பில் ஓர் எழுத்தாளரின் குடும்பம், அரசுடைமையாகுமா கமாலின் நூல்கள் என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
தற்போது தமிழக அரசு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எஸ்.எம்.கமால் உள்பட 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி இருக்கிறது. இச்செய்தி கமாலின் குடும்பத்தினருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
அவர்கள் தமிழக அரசுக்கும் தினமணி நாளிதழ் உள்ளிட்ட இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமாலின் சீடரும், தமிழ்ச்சங்கத் தலைவருமான மை.அப்துல்சலாம் கூறியதாவது: ஆசிரியர் கமால் எழுதிய அனைத்து நூல்களும் அரிய பொக்கிஷங்கள். கமாலின் குடும்பத்தினர் பண்டிகை நாள்களில் கூட புதிய துணி உடுத்தவும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் உள்ளனர்.
எனவே அவர் எழுதிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து
அரசுக்கு கோரிக்கை வைத்தோம். தினமணி வெளியிட்ட செய்தியையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் கமாலின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருப்பது
பெருமைக்குரியது. அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சார்பில் அரசுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் முயற்சிகள் எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுதி முடித்து பதிப்பிக்க முடியாத நிலையிலும் இன்னும் 7 நூல்கள் தயார் நிலையில் உள்ளன.
அவையும் மிக முக்கியமானவைகளாக இருப்பதால் அந்த நூல்களையும் பதிப்பித்துத் தர தமிழ் ஆர்வலர்களும் அரசும் முன்வர வேண்டும் எனவும் மை.அப்துல்சலாம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.