ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,07,500 விவசாயிகளுக்கு ரூ.493 கோடி மதிப்பில் பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை அவரவர் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வேளாண்மை இணை இயக்குநர் பா.இந்திராகாந்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)பா.ராஜா, பயிற்சி ஆட்சியர்.மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:
கடந்த 2016-2017 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1,18,625 விவசாயிகள் 1,13,920 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிருக்கு பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். இதில் 1,07,500 விவசாயிகளுக்கு ரூ.493 கோடி மதிப்பில் பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை அவரவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 369 வருவாய் கிராம விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள 24 வருவாய் கிராமங்களில் 13 வருவாய் கிராமங்களுக்கு ஒரு வார காலத்தில் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இம்மாதம் 5 மற்றும் 12 ஆம் தேதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 1220 மில்லியன் கன அடி தண்ணீர் வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டு அது பெரிய கண்மாய்க்கு வந்து சேர்ந்தது.பெரிய கண்மாயில் இருந்து ராமநாபுரம் நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊருணிகளில் தண்ணீரை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் இயந்திரம் மூலம் குதிரைவாலி மணிகளை கதிர்களில் இருந்து பிரித்து எடுத்தல் செயல்முறை விளக்கமும் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.ஷியாமளாநாதன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.