100 நாள் வேலைக்கு ஒரு வருடம் சம்பளம் பாக்கி: கமுதி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து வியாழக்கிழமை கமுதி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
Updated on
1 min read

கமுதி அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து வியாழக்கிழமை கமுதி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
     கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிக்கு உள்பட்ட வேப்பங்குறிச்சி, முத்தனேரி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்கவில்லையாம். இந்நிலையில்  மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம பொது மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு வந்திருந்தனர். அங்கு தங்களது அடையாள அட்டைகளைக் கைகளில் ஏந்தியபடி ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டபடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
   மேலும் முத்தனேரி கிராமத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட மயானம் அமைப்பு பணிகளுக்கான  கட்டுமான பொருள்களை அதிகாரிகளே அப்புறப்படுத்திவிட்டதாகவும், குடிநீருக்காக ஆழ்துளைக் குழாய் அமைத்து  அதனை செயல்படுத்தாமல் வீணடித்துள்ளதாகவும், பேருந்து நிழற்குடை உள்ளிட்ட திட்டங்களை முறையாக அமைக்காமல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அப்போது,அச்சங்குளம் ஊராட்சி செயலரை விசாரித்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்  உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
  இது குறித்து வேப்பங்குறிச்சி முனியசாமி கூறியதாவது.
   ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக சம்பளம் வழங்காமால் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. குறிப்பாக குடிநீர், மின்சாரம் சாலை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி தங்களது கிராமம் அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை தொடர் கதையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com