பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்கோயில் சித்திரைத் திருவிழா நடத்தும் விழாக்குழுவினர் இடைத்தரகர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருவிழா ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு புஷ்பப் பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி, மறுநாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி தல்லாகுளம் மண்டகப்படியிலிருந்து புறப்பாடாகி பக்தர்களால் மஞ்சள் நீரை பீச்சாங்குழல் என்னும் துருத்தி மூலம் பீய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், வண்டியூர் என்னும் காக்காத்தோப்பு சோலையில் சேர்க்கையாகும் நிகழ்ச்சியும், மே 1-ஆம் தேதி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து 10 நாள்களாக நடைபெறும் திருவிழாவில் பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைப்பதில் இடைத்தரக்களுக்கிடையே போட்டா போட்டி நிலவிவருகிறது. ராட்டினங்கள் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆற்றின் நிலத்தன்மையை கருத்தில்கொண்டு அனைத்துத்துறை அதிகாரிகளும் முறையான சான்று வழங்குவதில்லையாம்.
இதனை பயன்படுத்தி இடைத்தரகர்கள் நீதிமன்ற தடையாணை பெற்று விழாக்குழுவினர் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஒரு கணிசமான தொகையை பெற்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதுபோன்றவர்களின் புகார் மனுக்களை வைத்து ஒவ்வொரு துறை அதிகாரிகளும் விழாக்குழுவினரிடம் பணம் பெறுகின்றனராம்.
விழாவை சிறப்பாக நடத்தவேண்டும் என்ற நோக்கில் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் பணம் செலவு செய்வதுடன், ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் சந்தித்து வாய்மொழி உத்தரவுபெற அலைக்கழிக்கப்பட்டு வருவதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
சித்திரைத் திருவிழாவை சிறப்பாக கொண்டாட அனைத்துத்துறை அதிகாரிகளும் முறையான அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








