சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியேற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.
தொடர்ந்து, காவல்த் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து,சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும்,வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை,முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 12 ஆயிரத்து 529 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர்,மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவை அடுத்து,பரதம்,பல்வேறு மாநிலங்களின் கலைகள், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை விளக்கும் வகையில் மாணவ,மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தேசியக் கொடியினை ஏற்றினார். பின்னர் உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும்,வெண் புறாக்களையும் வானில் பறக்க விட்டார்.
தொடர்ந்து திறந்த ஜீப்பில் போலீஸாரின் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுடன் சென்று பார்வையிட்டார்.
பின்னர் ஆயுதப்படை ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் ஆயுதப்படை போலீஸார், ஊர்க்காவல்படையினர்,தேசிய மாணவர் படை,நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரணர் இயக்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அணிவகுப்புக்கு தலைமை வகித்து வந்த படைத்தளபதிகளை எஸ்.பி.ஓம் பிரகாஷ் மீனா ஆட்சியருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்து அவர்களை வணங்கினார்.இதன் தொடர்ச்சியாக 84 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் காவல்துறையிலும்,அரசின் பல்வேறு துறைளிலும் சிறப்பாக பணியாற்றியவர்கள், பல்வேறு சமூக சேவை செய்தவர்கள் உள்பட பலருக்கும் ஆட்சியர் விருதுகளையும்,பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.நிறைவாக ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மு.லோகசுப்பிரமணியன் தலமையில் சிலம்பாட்டம் உள்பட பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரி, கோட்டாட்சியர் ஆர்.சுமன் உள்பட உயர் அதிகாரிகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் ஆட்சியரோடும், எஸ்.பி.யோடும் இணைந்து குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.