
ராமநாதபுரம் மாவட்டத்தில் "முத்ரா' கடன் வழங்க சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் முத்ரா கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் முத்ரா கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்:
மிளகாய்க்கும் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும். பயிர்க்காப்பீடு வழங்கப்படாமல் விடுபட்டவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். போதுமான மழை இல்லாததால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரம் விற்பனை செய்யும் தனியார்கள் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள் முறையாக செய்யப்படவில்லை.
வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். வைகை ஆற்றில் நிறைந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்றவேண்டும். முத்ரா கடன் வழங்குவதற்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரூ. 53 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் அதிகமாக வழங்க வங்கி மேலாளர்கள் முன்வருவதில்லை.
பெரியாறு, வைகை அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரத்துக்கு வரவில்லை. மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகிறார்கள். பரமக்குடியில் 250 அடி ஆழத்திற்கு கீழே தண்ணீர் போய் விட்டது. பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ராமநாதபுரத்தில் விமான நிலையம் தொடங்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் சிறப்புக்கவனம் செலுத்தி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். ராமநாபுரம் சக்கரக்கோட்டை கண்மாயை தூர்வாரி கரைகளை உயர்த்திக்கட்ட வேண்டும். வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் 100 நாள் வேலைத்திட்டத்தில் சீரமைக்கப்பட வேண்டும் என்றனர்.
விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ஆட்சியர் பதிலளித்து பேசியது:
முத்ரா திட்டத்தில் கடனுதவி கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே, மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக முத்ரா கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும். வைகை அணைத் தண்ணீரைத் திறந்து விடுமாறு அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விடுபட்டுப் போன விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் 3 விஷயங்களில் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒன்று இயற்கையை பாதுகாக்க நீர்ஆதாரங்களை பெருக்கிட வேண்டும். 2 ஆவதாக மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,3 ஆவதாக சுற்றுச்சூழலை பாதுக்காக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






